இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் நுழைந்ததா? இல்லையா? மத்திய அரசு தெளிவுப்படுத்த ராகுல் காந்தி கோரிக்கை

டெல்லி: இந்திய எல்லைக்குள் எந்த ஒரு சீன ராணுவ வீரரும் நுழையவில்லை என்பதை மத்திய அரசு உறுதி செய்ய முடியுமா? என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்திய லடாக் எல்லையில் இந்திய-சீன ராணுவ வீரர்களுக்கு இடையே கடந்த மாதம் முதல் வாரத்தில் கைகலப்பும், மோதலும் ஏற்பட்டது. அதன் காரணமாக அங்கு பதற்றம் நிலவுகிறது.

மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் குறிப்பிட்ட எண்ணிக்கையில் சீன துருப்புகள் கிழக்கு லடாக் பகுதிக்கு நகர்ந்துள்ளனர். இந்தியா தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்று  தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது: இந்திய எல்லைக்குள் எந்த ஒரு சீன ராணுவ வீரரும் நுழையவில்லை என்பதை மத்திய அரசு உறுதி செய்ய முடியுமா? எல்லையில் என்ன தான் நடக்கிறது? மவுனம் நிச்சயமின்மைக்கும் யூகங்களுக்குமே வழி வகுக்க கூடியதாக உள்ளது.

லடாக் எல்லை சூழ்நிலை குறித்து அரசின் இந்த மவுனம் பெரிய சந்தேகத்திற்கே வழி வகுக்கிறது. மேலும் நெருக்கடி காலத்தில் நிச்சயமற்ற நிலையையும் உருவாக்குகிறது என பதிவிட்டுள்ளார்.