சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நாளை தமிழகம் வருகிறார். தொடர்ந்து 3 நாட்கள் தமிழகத்தில் முகாமிடும், ராகுல் தென்மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார். அதன்படி,  தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, குமரி  மாவட்டங்களில்  நாளை முதல் மார்ச் 1-ந்தேதி வரை  பிரசாரம் மேற்கொள்கிறார்.

நாளை காலை 11 மணிக்கு தனி விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வரும் ராகுல்காந்திக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அங்கிருந்து, தூத்துக்குடி வஉசி கல்லூரிக்கு செல்லும் ராகுல், அங்கு வழக்கறிஞர்களுடன்  கலந்துரையாடுகிறார்.

தொடர்ந்து, மதியம் 1 மணிக்கு தூத்துக்குடி குரூஸ் பர்னாந்து சிலை அருகே “ரோடு ஷோ” மூலம், காரில் பயணம் செய்து, பொதுமக்களை சந்தித்து பேசுகிறார். தொடர்ந்து, தூத்துக்குடி பீச் ரோடு வழியாக முத்தையாபுரத்தை அடுத்த கோவங்காடு விலக்கு பகுதிக்கு செல்கிறார். அங்குள்ள ஒரு மண்டபத்தில்,  உப்பள தொழிலாளர்களுடன் கலந்துரையாடுகிறார்.

பின்னர், பிற்பகல், அங்கிருந்து கிளம்பி, முக்காணி, ஆத்தூர், குரும்பூர் வழியாக மக்களை சந்தித்தவாறே  ஆழ்வார்திருநகரியில் உள்ள  காமராஜர் சிலை  நடைபெறும்  பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

தொடர்ந்து, மாலை அங்கிருந்து புறப்பட்டு, நாசரேத் செல்கிறார். அங்கு பழமையான  சி.எஸ்.ஐ. தேவாலயத்தை பார்வையிடுகிறார். பின்னர், அங்கிருந்து கார் மூலம்,  சாத்தான் குளம், இட்டமொழி வழியாக மன்னார்புரம் விலக்கு சென்று, அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தல் பங்கேற்கிறார். தொடர்ந்து,  அங்கிருந்து பரப்பாடி வழியாக நாங்குநேரி டோல்கேட் பகுதியில் காங்கிரஸ் பொருளாளர் ரூபி மனோகரன் ஏற்பாடு செய்துள்ள காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

அதை முடித்துக்கொண்டு இரவு நெல்லை செல்லும் ராகுல்காந்தி, அங்குள்ள  தனியார் ஓட்டலில் தங்குகிறார்.

ஞாயிற்றுக்கிழமை (28ந்தேதி) அன்று   காலை, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பொதுமக்களை சந்தித்தவாறே பல்வேறு பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்கிறார்.

3வது நாளான மார்ச் 1-ந்தேதி குமரி மாவட்டத்திலும் பிரசாரம் மேற்கொள்கிறார். அங்கு பிரசாரத்தை முடித்துவிட்டு இரவு டெல்லி திரும்புகிறார்.