நெல்லை:  தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு, ராகுல்காந்தி 5கட்ட தேர்தல் பிரசாரம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளதாக,  காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரக் குழுத் தலைவர் சு.திருநாவுக்கரசர் எம்.பி.  தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலியில் செய்தியளார்களிடம் பேசிய திருநாவுக்கரசர் எம்.பி.,  தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, 5 கட்டங்களாக பிரசாரம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.

முதல்கட்டமாக  கோவை மண்டலத்தில் 3 நாட்கள் பிரசாரம் மேற்கொள்ள உள்ளளார்.அதைத்தொடர்ந்து  தமிழகம் முழுவதும் சென்று பிரச்சாரம் செய்கிறார். இறுதியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்வார். அங்கு நாடாளுமன்ற இடைத்தேர்தலும் நடைபெற இருப்பதால், அங்கு பிரமாண்ட பிரசார கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. எங்கெல்லாம் அவர் பிரசாரம் செய்வார் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.

திமுக காங்கிரஸ் கூட்டணியில், முதல்வர் வேட்பாளர் மு.க.ஸ்டாலின். அதை முன்னிறுத்தியே தேர்தல் பிரசாரம் இருக்கும் என்றவர்,  தமிழக அரசின் செயல்படாத தன்மை, ஊழல், மத்திய அரசின் கைப்பொம்மையாக இருப்பது, வேலையில்லா திண்டாட்டம் , விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் போன்றவற்றை முன்வைத்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்வோம் என்றார்.

தொடர்மழையால் தென்மாவட்டங்களில்  பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் குறித்து கணக்கெடுத்து, ஏக்கருக்கு குறைந்தபட்சம் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியவர்,  கொரோனா தடுப்பூசியை அனைவருக்கும் இலவசமாக கிடைக்கச் செய்வதுடன், இது தொடர்பாக மக்கள் மத்தியில் உள்ள அச்சத்தை போக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

டெல்லி விவசாயிகள் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த திருநாவுக்கரசர்,  விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வராமல் மத்திய அரசு விவசாயிகளுக்கு விரோதமாக செயல்படுகிறது.