நெல்லை: பிரதமர் மோடி சிறுதொழில்களை அழித்து வருவதாக காங்கிரஸ்  தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

நெல்லை மாவட்டத்தில் சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டுள்ள ராகுல் காந்தி ஆலங்குளத்தில் திரண்டிருந்த மக்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

நமது நாட்டில் வேலை வாய்ப்புகளை சிறு தொழில்கள் வழங்கி வருகின்றன. அவைதான் வேலைவாய்ப்பிற்கு முதுகெலும்பாக உள்ளது. ஆனால் அந்த முதுகெலும்பை மோடி நசுக்கி அழித்து வருகிறார். பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்றவை பீடி தொழில் போன்ற சிறுதொழில்களை அழித்து வருகின்றன.

3 வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயத்தை மோடி அழித்து வருகிறார். தமிழக முதலமைச்சரின் நடவடிக்கை ஏமாற்றம் தருவதாக உள்ளது. அவர் மோடியை கேள்வி கேட்பதை தவிர்த்து, அவரின் மடியில் சாய்ந்து கொண்டிருக்கிறார். தமது ஊழல் நடவடிக்கைகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக மோடியை துதி பாடி வருகிறார்.

தமிழக அரசை ரிமோட் மூலம் மோடி இயக்கி வருகிறார். மத்திய அரசு மதிக்கும் அரசு தமிழகத்தில் அமைய வேண்டும் என்பதே எனது விருப்பமாகும். ஏழைகளையும், தொழிலாளர்களையும் விவசாயிகளையும் அரவணைக்கும் ஆட்சி அமைய வேண்டும்.

மாநில அரசு வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும், விவசாயத்தை வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசினார். முன்னதாக ஆலங்குளம் நகருக்குள் நுழையும் முன்பாக சாலையோரத்தில் இறங்கி ராகுல் காந்தி இளநீர் அருந்தினார்.