டில்லி

மித்ஷா மகன் பற்றி வந்துள்ள செய்திக்கு ஏதாவது பதில் சொல்லுமாறு மோடியை ராகுல் காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

”தி வயர்” என்னும் இணைய தளம் சமீபத்தில் ஒரு செய்தி வெளியிட்டு இருந்தது.   அதில் அமித்ஷா வின் மகன் ஜெய் ஷா நடத்தி வரும் டெம்பிள் எண்டர்பிரைசஸ் என்னும் நிறுவனத்தின் வருமானம் ஒரே ஆண்டுக்குள் 16 ஆயிரம் மடங்கு அளித்துள்ளதாக சொல்லப் பட்டிருந்தது.    2014-15 ஆம் ஆண்டில் ரூ.50 ஆயிரம் வருமானம் பெற்ற டெம்ப்ள் என்டர்ப்ரைசஸ் அடுத்த வருடம் 2015-16ல் ரூ.80.5 கோடி வருமானம் ஈட்டி உள்ளதாக அந்த இணைய தளம் குற்றம் சாட்டி இருந்தது.   இது எதிர்கட்சிகள் இடையே கடும் பரபரப்பை உண்டாக்கியது.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இது குறித்து, “பிரதமர் மோடி பதவி ஏற்ற பிறகு இந்த வருமான அதிகரிப்பு நடந்துள்ளது.   மோடி கொண்டு வந்த பணமதிப்பு குறைப்பு நடவடிக்கையால் மக்கள், விவசாயிகள், ரிசர்வ் வங்கி ஆகியோர் பயன் அடையவில்லை.   ஆனால் ஜெய் ஷா பலன் அடைந்துள்ளார்.  ஜெய் ஷா தற்போது மன்னர்களுக்கு எல்லாம் மன்னர் ஆக இந்த நடவடிக்கை உதவி உள்ளது.” என கூறி இருந்தார்.

பா ஜ க இந்த குற்றச்சாட்டை மறுத்தது.   மேலும் இந்த செய்தி தவறானது எனவும் அந்த செய்தியை வெளியிட்ட இணைய தளத்தின் மீது ஜெய் ஷா உடனடியாக வழக்கு தொடர உள்ளார் என தெரிவித்திருந்தது.   அதன் படி ஜெய் ஷாவின் தரப்பில் இருந்து அந்த இணைய தளத்துக்கு நோட்டிஸ் அனுப்பப் பட்டது.

ராகுல் காந்தி தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில், “மோடிஜி, நீங்கள் அமித் ஷாவுக்கு காவலரா இல்லை கூட்டாளியா? இந்த விவகாரத்தில் தயவு செய்து ஏதாவது ஒரு பதிலை சொல்லுங்கள்” என கேள்வி கேட்டுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மாவும் இது குறித்து மோடி தனது மவுனத்தை கலைத்து ஜெய் ஷாவின் நிறுவனம் பற்றி வெளியாகி உள்ள தகவல் குறைத்து விசாரணைக்கு ஆணை இட வேண்டும் எனவும்,  அமித் ஷா கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்த விசாரணையை சந்திக்க முன் வர வேண்டும் எனவும் கூறி உள்ளார்.