பெங்களூரு:

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அரசு வேலையிலும் பெண்களுக்கு 33 சதவீதம்  இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நேற்று கர்நாடக மாநிலத்தில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார். கோலால், சித்ரதுர்கா போன்ற இடங்களில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு பேசிய ராகுல்,  மோடியை சரமாரியாக சாடினார்.

இந்த தேர்தல்,  வெறுப்பு, கோபம் மற்றும் பிளவுபடுத்தும் அரசியலுக்கும், அன்பு, பாசம் மற்றும் சகோதரத்துவத்துக்கும் இடையேயான போர் என்று ஒப்பிட்டு பேசியவர், கடந்த தேர்தலின்போது,  ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம்  போடப்படும் என்று பொய்சொல்லி வெற்றி பெற்ற மோடியின் பொய் பிரசாரத்திற்கும், வறுமை கோட்டுக்கு கீழே வாழும் ஒவ்வொரு பெண்ணின் வங்கி கணக்கிலும்  வருடத்துக்கு ரூ.72 ஆயிரம் வீதம்  செலுத்தப்படும் என்ற காங்கிரஸ் கட்சியின்  வாக்குறுதிக்கும் இடையேயான போர் என்று விமர்சித்தார்.

விவசாயி, தொழிலாளர், வேலையில்லாதவர் வீட்டு வாசல்களில் காவலாளி நிற்பதை பார்த்திருக்கிறீர்களா?  என்று கேள்வி எழுப்பிய ராகுல்,  ஆனால், காவலாளி அனில் அம்பானி வீட்டின்  வெளியே நிற்பதை பார்த்திருப்பீர்கள்… அதுபோலத்தான்  இந்த காவலாளி (மோடி) நாட்டில் உள்ள  15 முதல் 25 பணக்காரர்களின் வீடுகளுக்கு மட்டுமே காவல் காக்கிறார்.. கடனை செலுத்தாத விவசாயிகளை சிறையில் அடைக்கிறார்.

நாட்டில் மோடி என்ற பெயரைக் கொண்டவர்கள் எல்லாம் திருடர்களாக இருக்கிறார்கள் என்று கூறியவர்,.  நிரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என்று ஏன் எல்லா திருடர்களும் மோடி என்ற துணைப்பெயரைத்தான் கொண்டிருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார்.

தேர்தலில் வெற்றிபெற்று காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முதல் நடவடிக்கையாக மகளிருக்கு சட்டமன்றம், பாராளுமன்றம் ஆகியவைகளில் 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று தெரிவித்தவர், அரசு வேலையிலும் பெண்களுக்கு 33 சதவீதம் ஒதுக்கப்படும் என்றும் அறிவித்தார்.

அதுபோல ஏழை தொழிலாளர்களின் வாழ்வை முடக்கிய ஜி.எஸ்.டி. வரி முறையில் மாற்றம் செய்யப்படும். அதை ஒருமுனை வரியாக மாற்றுவதன் மூலம் அனைத்து தரப்பு மக்களும் பயன் அடைவார்கள். இந்திய பொருளாதாரத்தையும், மக்களையும் சீரழித்த கப்பர் சிங் டாக்ஸ் (ஜி.எஸ்.டி.) வரிமுறைக்கு முடிவுகட்டப்படும்.

இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்