டில்லி,

லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டு 4 ஆண்டுகள் கடந்தும் இன்னும் லோக்பால் அமைக்கப்படவில்லை என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மத்திய பாஜ அரசுமீது  குற்றம் சாட்டினார்.

கடந்த 2013ம் ஆண்டு லோக்பால் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், 4 ஆண்டுகள் கடந்தும் இன்னும்,  லோக்பால்  அமைப்பு மற்றும்  தலைவரும், உறுப்பினர்களும் நியமிக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்துகிறது என்று  ராகுல் காந்தி கூறினார்.

காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்றபோது கடந்த 2013ம் ஆண்டு லோக்பால் மற்றும் லோக்ஆயுக்தா சட்டம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

ஆனால் அதை தொடர்ந்து நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், பாஜக அரசு, காங்கிரஸ் ஆட்சியின்போது கொண்டு வரப்பட்ட லோக்பால் மசோதாவை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி வருகிறது.

லோக்பால் அமைப்பின் தலைவர்களையும், உறுப்பினர்களையும் தேர்வு செய்யும் குழுவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும்  இடம் பெற வேண்டும். ஆனால் தற்போதைய சூழலில் மக்களவையில் எதிர்க்கட்சி அந்தஸ்தில் எந்த கட்சியும் இல்லை. அதன் காரணமாக அதற்கு தகுந்தவாறு  எதிர்க்கட்சிகளில் மிகப்பெரிய கட்சி என்று திருத்த வேண்டும். இது தொடர்பாக புதிய சட்டம் இயற்றவும், அல்லது சட்டத்தை திருத்தவும் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளது.

இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் இதுகுறித்து கருத்து பதிவிட்டு உள்ளார்.

அதில்,  லோக்பால் சட்டம் நிறைவேற்றப்பட்டு 4 ஆண்டுகள்  ஆகிவிட்டது, ஆனால், இன்னும் லோக்பால் அமைக்கப்பட வில்லை. எப்போது வரை இந்த தவறை தொடர்ந்து செய்வீர்கள் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள்.

இவ்வாறு அவர் விமர்சித்துள்ளார்.