டில்லி:

டில்லியில் ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் முதல் முறையாக இன்று நடந்தது.

காங்கிரஸ் தலைவராக சோனியாகாந்தி 19 ஆண்டுகள் பணியாற்றினார். இதை தொடர்ந்து அகில இந்திய தலைவராக சில தினங்களுக்கு முன்பு ராகுல்காந்தி பொறுப்பேற்றார். இந்நிலையில் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் ராகுல்காந்தி தலைமையில் முதல் முறையாக இன்று நடந்தது. கூட்டத்தில் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர்

இதில் ராகுல்காந்தி பேசுகையில், ‘‘பாஜக.வின் முழு வடிவமைப்பும் பொய்யாக உள்ளது. அனைவருக்கும் 2ஜி பற்றி தெரியும். இதன் உண்மை தற்போது வெளிவந்துள்ளது. குஜராத் மாடல் என்பது தற்போது தெளிவாக தெரிந்துவிட்டது. குஜராத்துக்கு நாம் சென்றபோது அங்கு எந்தவித மாடலும் இல்லை என்பதை மக்கள் தெரிவித்தனர்.

மக்கள் வளம் சுரண்டப்பட்டதாக கூறப்பட்ட 2ஜி என்ன ஆனது. ஒவ்வொரு வங்கி கணக்கிலும் ரூ. 15 லட்சம் வரவு வைக்கப்படும் என்ற பாஜக.வின் வாக்குறுதி என்ன ஆனது. பணிமதிப்பிழப்பு, கபார் சிங் டாக்ஸ் (ஜிஎஸ்டி) என்று அனைத்துமே பொய்யாகவுள்ளது’’ என்றார்.

கூட்டத்துக்கு பின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா கூறுகையில், ‘‘2ஜி ஊழல் காரணமாக நாடாளுமன்றத்தின் 500 மணி நேரத்தை பாஜக வீணடித்தது. ஒவ்வொரு நிமிடமும் அப்போது ரூ.2.50 லட்சமாகும். இதற்காக பாஜக.விடம் ரூ.750 கோடியை வசூலிக்க வேண்டும்’’ என்றார்.