புதுடெல்லி:

கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் விஷயத்தில், மத்திய அரசு, தவறான நேரத்தில் தவறான முடிவை எடுத்துள்ளதாக, மற்ற நாடுகளின் வைரஸ் பரவல் வரைபடங்களை ஒப்பிட்டு, காங்கிரஸ் கட்சி தலைவர்  ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.

கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு தோல்வி அடைந்து விட்டதாக, ராகுல் காந்தி ஏற்கனவே குறை கூறியிருந்தார். இதற்கு மத்திய அமைச்சர்கள் பதிலடி கொடுத்தனர். இந்நிலையில், ஸ்பெயின், ஜெர்மனி, இத்தாலி, பிரிட்டன் ஆகிய நாடுகளின் வைரஸ் பரவல் வரைபடங்களையும், நம் நாட்டில் வைரஸ் பரவல் வரைபடங்களையும் ஒப்பிட்டு, மத்திய அரசு, தவறான நேரத்தில் தவறான முடிவு எடுத்ததாக ராகுல், மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார்.

‘ஊரடங்கு தோல்வி அடைந்ததை விளக்கும் வரைபடம்’ என குறிப்பிட்டு, அந்த வரைபடங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இதில், ஸ்பெயின், ஜெர்மனி, இத்தாலி, பிரிட்டன் ஆகிய நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டபோது, வைரஸ் பரவல் அதிகரித்ததும், தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின், வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளதையும் விளக்கும் வரைபடங்களை வெளியிட்டுள்ளார்.

ஆனால், நம் நாட்டில் ஊரடங்கு துவங்கியதில் இருந்தே வைரஸ் பாதிப்பு அதிகரித்ததும், தளர்வுக்குப் பின், மேலும் அதிகமாகி வருவதையும் விளக்கும் வரைபடங்களையும் வெளியிட்டு உள்ளார். ஸ்பெயின், இத்தாலி உள்ளிட்ட நாடுகள்,முன் கூட்டியே திட்டமிட்டு சரியான முடிவை எடுத்ததாகவும், நாம், தவறான முடிவை எடுத்ததாகவும், அந்த வரைபடங்களின் மூலம், ராகுல் விளக்கியுள்ளார்.