டில்லி

ரிசர்வ் வங்கியிடம் இருந்து மத்திய அரசுக்கு நிதி அளிப்பதற்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கி தன்னிடம் உள்ள உபரி நிதியில் இருந்து மத்திய அரசுக்கு நிதி உதவி அளிக்குமாறு அரசு கேட்டு வந்தது. இதற்கு முந்தைய ரிசர்வ் வங்கி  ஆளுநரான உர்ஜித் படேல் மற்றும் ரகுராம் ராஜன் ஆகியோர் அவ்வாறு அளிக்க மறுத்தனர். அதனால் மத்திய அரசுடன் மோதல் ஏற்பட்டது. அதையொட்டி இருவரும் ராஜினாமா செய்துள்ளனர்.

தற்போது ரிசர்வ் வங்கி ஆளுநராக உள்ள சக்திகாந்த தாஸ் தனக்கு முன்பு இருந்தவர்கள் மறுப்பு தெரிவித்தமைக்கு நேர் மாறாக ரூ.1.76 லட்சம் கோடி நிதியை மத்திய அரசுக்கு அளிக்க உள்ளார். இதற்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும்  பல பொருளாதார நிபுணர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்/

முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டரில்,  “தற்போதுள்ள பொருளாதார பேரழிவைச் சரி செய்யப் பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோரிடம் எந்த ஒரு யோசனையும் கிடையாது. அவர்கள் ரிசர்வ் வங்கியிடம் இருந்து திருடுகிறார்கள். இது துப்பாக்கிக் குண்டு தாக்குதலுக்கு ஒரு பாண்ட் எய்ட் பிளாஸ்திரியை திருடி ஒட்டுவதற்குச் சமமாகும்” என பதிந்துள்ளார்.

.