அரசுத்துறைகளைத் தனியார் மயமாக்குதல் : ராகுல் காந்தி கடும் கண்டனம்

--

டில்லி

அரசுத்துறைகளைத் தனியார் மயமாக்கும் பாஜக அரசின் செயல்பாடுகளுக்கு காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்தியில் ஆளும் பாஜக அரசுத்துறைகளைத் தொடர்ந்து தனியார் மயமாக்கி வருகிறது.

இதற்கு அந்த துறைகளில் கடும் இழப்பு ஏற்படுவதால் சமாளிக்க முடியவில்லை என அரசு காரணம் தெரிவித்து வருகிறது.

ஆனால் நஷ்டத்தில் இயங்கும் துறைகளைத் தனியார் வாங்கி அதை லாபமாக நடத்தி வருவதும் தொடர்ந்து வருகிறது.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில்,

”நாட்டின் வளங்களை மோடியின் நண்பர்களுக்குத் தாரை வார்க்க, பாஜக அரசு சில வியூகங்களைச் செயல்படுத்துகிறது.

  1. பொதுத்துறை நிறுவனங்களை நஷ்டமாக்குவது.
  2. போட்டியைச்சமாளிக்க இயலவில்லை என்று நண்பர்களின் மூலம் ஊடகத்தில் பிரச்சாரம் செய்வது.
  3. சொற்ப விலைக்கு மோடியின் நண்பர்களுக்கு விற்பது”

எனப் பதிந்துள்ளார்.

அத்துடன் தனது பதிவில் இந்திய ரயில்வே அமைச்சகம் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க நிதி இல்லை எனத் தெரிவித்துள்ள செய்தியைச் சுட்டிக் காட்டி உள்ளார்.