கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை பிரதமர் மோடி அரசு பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

டெல்லி: கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

உலகையே பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி இருக்கும் கொரோனா வைரசால் 3000 பேர் பலியாகி உள்ளனர். பல ஆயிரக்கணக்கானோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் இப்போது 3 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. இதையடுத்து, மருத்துவ பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

இந் நிலையில் பிரதமர் மோடியின் மத்திய அரசு, கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதிலும், அதன் அச்சுறுத்தலையும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது: கொரோனா வைரஸ் நமது மக்களுக்கும் நமது பொருளாதாரத்திற்கும் மிகவும் கடுமையான அச்சுறுத்தலாகும்.

இந்த அச்சுறுத்தலை அரசாங்கம் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பது என் உணர்வு. சரியான நேரத்தில் நடவடிக்கை முக்கியமானது என்றார்.

மற்றொரு பதிவு ஒன்றில், ஒவ்வொரு தேசத்தின் வாழ்க்கையிலும் அதன் தலைவர்கள் சோதிக்கப்படும் தருணங்கள் உள்ளன. இந்தியா மற்றும் அதன் பொருளாதாரம் மீது கட்டவிழ்த்து விடப்படவிருக்கும் நெருக்கடியை தவிர்ப்பதில் ஒரு உண்மையான தலைவர் முழுமையாக கவனம் செலுத்துவார் என்று கூறி உள்ளார்.

கார்ட்டூன் கேலரி