டெல்லி:
கொரோனா ஊரடங்கு காரணமாக, வாழ்வாதாரத்தை இழந்த தனியார் வாகன ஓட்டுநருடன் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கலந்துரையாடினார்.
எளிமையாக சாலையோர நிழலில் அமர்ந்து அவர் உரையாடிய காட்சி தொடர்பாக புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24ந்தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.  4வது கட்டமாக மே 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தினக்கூலிகள், தொழிலாளர்கள்,  கார், ஆட்டோ ஓட்டுநர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.
இந்த காலக்கட்டத்தில்  தின வருவாயை நம்பி வாழும் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. மத்திய மாநில அரசுகள், அவர்கள் நிலை  குறித்து கவலைப்படாமல் தான்தோன்றித்தன மாக செயல்பட்டு வருகின்றன.
ஊரடங்கால் பாதிக்கப்பட்டு, எந்தவித வசதியுமின்றி நாள்தோறும் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களை நோக்கி நடைபயணமாக சென்றுகொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு காங்கிரஸ் கட்சியினர் தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்.
ஏற்கனவே டெல்லியில் நடைபயணம் சென்றுகொண்டிருந்த புலம்பெயர் தொழிலாளர்களை சந்தித்த ராகுல்காந்தி, அவர்கள் சொந்த ஊர் செல்ல வாகன வசதி ஏற்பாடு செய்து கொடுத்தார்.
இந்த நிலையில், கொரோனா லாக்டவுனால்  வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள  டெல்லியில் வாழும் தனியார் வாகன ஓட்டுநருடன், சாலையோரம்   அமர்ந்து ராகுல்காந்தி கலந்துரையாடினார். அப்போது அவரது குடும்ப வாழ்க்கை, தொழில் முடக்கம் குறித்து கேட்டறிந்தார்.
இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.