டில்லி

வேளாண் சட்டங்கள் “நாம் இருவர் நமக்கு இருவர்” என்னும் அடிப்படையில் 4 பேருக்காகக் கொண்டு வரப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி மக்களவையில் பேசி உள்ளார்.

பாஜக அரசு கொண்டு வந்த 3 வே:ளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி 70 நாட்களுக்கும் மேலாக டில்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.   மத்திய அரசு மற்றும் விவசாயிகள் இடையே இதுவரை 11 சுற்றுப் பேச்சு வார்த்தைகள் நடந்தும் எவ்வித தீர்வும் காணப்படவில்லை.   எனவே போராட்டம் மேலும் தொடர உள்ளது.

இன்று மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மான விவாதத்தில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டு உரையாற்றினார்.   அப்போது அவர் இந்த 3 வேளாண் சட்டங்களும் வேளாண் துறைக்கு ஊக்கமளிக்க கொண்டு வரப்பட்டதாகவும் இதற்கு காங்கிரஸ் கட்சி தவறான வர்ணம் பூசி விமர்சனம் செய்து பொய்களைப் பரப்புவதாகவும் குற்றம் சாட்டி உள்ளார்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி இதற்குப் பதிலாக, “நாட்டின் முதுகெலும்பாக உள்ள விவசாயத்தை அழிக்கும் நோக்கில் மத்திய அரசு இந்த சட்டங்களைக் கொண்டு வந்துள்ளது.  இதனால் விவசாயிகளுக்கு எவ்வித நன்மையும் இல்லை.

தனது விளை பொருட்களில் விலையை நிர்ணயிக்க விவசாயிகள் தொழிலதிபர்கள் முன்பு நிற்கும் நிலை வரும்.   இந்த வேளான் சட்டங்களில் 2 ஆம் சட்டம் விளை பொருட்கள் பதுக்கலை ஊக்குவிக்கும்.  இதனால்  விளை பொருட்கள் குடோன்களில் அழுகும் நிலை உண்டாகும்.

அரசின் குடும்பக் கட்டுப்பாடு பிரசாரம் முன்பு நாம் இருவர் நமக்கு இருவர் என இருந்தது.  இப்போது அது வேறு வடிவில் மாறி உள்ளது.  தற்போது 4 பேர் இந்தியாவை வழி நடத்துகின்றனர்.  அவர்கள் யார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும்.  இந்த நாட்டை ஆளும் அந்த 4 பேர் நலனுக்காக வேளாண் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளது.

பிரதமர் இந்த பிரச்சினைக்கு 3 தேர்வுகளை அறிவித்துள்ளதாக சொல்கிறார்.  ஆம் அவர் மூன்று தேர்வுகள் பசி, வேலை இன்மை மற்றும் தற்கொலை ஆகியவையே ஆகும்.” எனக் கூறி உள்ளார்.” எனக் கூறினார்.  இதையடுத்து பாஜக உறுப்பினர்கள் கடும் கூச்சல் மற்றும் அமளியில் ஈடுபட்டனர்.