வாஷிங்டன்:

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி அமெரிக்காவில் இரண்டு வார சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். நேற்று முன்தினம் இந்தியாவில் இருந்து விமானம் மூலம் புறப்பட்ட அவர் நேற்று அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரை சென்றடைந்தார்.

விமான நிலையத்தில் அவரை காங்கிரசின் மூத்த தலைவர் சாம்பிட்ரோடா, அமெரிக்காவின் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கான தலைவர் சத் சிங் மற்றும் ஏராளமானவர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

இன்று(செவ்வாய்க்கிழமை) கலிபோர்னியாவின் பெர்க்லி பல்கலைக்கழகத்தில் ‘இந்தியா 70: முன்னோக்கிய பாதையின் பிரதிபலிப்பு’ என்ற தலைப்பில் மாணவர்களிடையே ராகுல்காந்தி உரையாற்றுகிறார்.

சான்பிரான்சிஸ்கோ பயணத்தை முடித்துக் கொண்டு ராகுல்காந்தி லாஸ்ஏஞ்சல்ஸ் நகருக்கு செல்ல இருக்கிறார். அங்குள்ள ஆஸ்பென் நிறுவனத்தில் சிந்தனையாளர் சமூகத்தினருடன் கலந்துரையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாஷிங்டன் நகரில் இதேபோல் சிந்தனையாளர் சமூகத்தினர், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகளுடன் அவர் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

தனது 2 வார பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பும் முன்பாக நியூயார்க் நகரில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் கூட்டத்தில் ராகுல்காந்தி பேசுகிறார்.