மும்பை

கொரோனாவால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ள இந்த சூழலில் பொறுப்பான எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி செயல்படுவதாக சிவசேனா புகழ்ந்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து கொரோனா பாதிப்பு குறித்து முன்னாள் காங்கிரஸ் தலைவரும் வயநாடு மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி மத்திய அரசுக்கு எச்சரிக்கை அளித்து வருகிறார்.  அத்துடன் கொரோனா என்னும் சுனாமியால் பொருளாதாரத்தை நிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் அரசை வலியுறுத்தி உள்ளார்.

மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா ஆகிய கட்சிக்ள் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வருகின்றன.  சிவசேனா கட்சியின் அதிகார பூர்வ நாளேடான சாம்னாவின் தலையங்கத்தில்,  “முன்னாள் காங்கிரஸ் தலைவர் .ராகுல் காந்தி மக்கள் நலனில் அக்கறை கொண்டு, அரசியல் முதிர்ச்சியுடன் கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்.

கொரோனா வைரஸால் நாடு இக்கட்டான சூழலைச் சந்தித்து வரும் போது ராகுல் காந்தி துணிச்சலான ஆலோசனைகளையும், நேர்மறையான அணுகுமுறைகளையும் வெளிப்படுத்தி இதுபோன்ற இக்கட்டான நேரங்களில் ஒரு பொறுப்பான  எதிர்க்கட்சி  எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை வெளிப்படுத்தி உள்ளார்.

கொரோனா குறித்து  ராகுல் காந்தியிடம் சில கருத்துக்கள் இருக்கின்றன.   அதைப்போல் பிரதமர் மோடியிடமும்,  அமித் ஷாவிடமும் கருத்துக்கள் இருக்கின்றன. கொரோனா வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நேரத்தில் நாட்டின் நலனுக்காக ராகுல் காந்தியும், பிரதமர் மோடியும் நேருக்கு நேர் சந்தித்து ஆலோசனை நடத்த வேண்டும்

ராகுல்காந்தியை விமர்சித்து, அவரின் மரியாதை சிதைக்கும் வகையில் பேசியதில் தான்  பாஜகவுக்கு வெற்றி கிடைத்து இது இன்னமும் தொடர்ந்து வருகிறது.

கொரோனா வைரஸால் உருவாகும் பாதிப்புகளைப் பற்றி ராகுல்காந்தி முன்கூட்டியே கணித்துக் கூறியதுடன் பலமுறை தொடர்ந்து மத்திய அரசை எச்சரித்து, எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்துப் பேசி வந்தார்.   பாஜகவினர், ஒவ்வொருவரும் மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியைக் கவிழ்ப்பதிலேயே தீவிரமாக இருந்தார்கள். கொரோனா வைரஸ் சிக்கலகளைக் கையாள மத்திய அரசை விழிக்க வைக்க ராகுல் மிகவும் முயன்றார்

அத்துடன் வெளிநாடுகளுக்கு மருத்துவ உபகரணங்களை ஏற்றுமதி செய்யாதீர்கள், நம்நாட்டில் கொரோனா நோயாளிகளுக்குத் தேவைப்படும் என்று ராகுல் அடிக்கடி தெரிவித்தார்.

சென்ற வியாழக்கிழமை அன்று ராகுல் காந்தி, சண்டையிடுவதற்கு இது நேரமல்ல. பிரதமர் மோடியுடன் எனக்குக் கருத்து முரண்பாடுகள் இருக்கலாம். அதற்கு இது நேரமல்ல. கொரோனாவைரஸுக்கு எதிராக ஒருங்கிணைந்து போராட வேண்டிய நேரம். நாம் சண்டையிட்டால் போரில் தோற்றுவிடுவோம் என்று மீண்டும் தெரிவித்தார்

அப்போது  அவர் கொரோனாவை  ஒழிக்க ஊரடங்கு  தீர்வல்ல, அது ஒத்திவைப்பது போன்றதுதான். ஊரடங்கு நீக்கப்படும் போது மீண்டும் கரோனா பரவத் தொடங்கிவிடும்.  எனவே மக்களுக்கு மிகப்பெரிய அளவில் பரிசோதனை நடத்தி மக்களுக்கு முழுமையான மருத்துவ வசதிகளை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என ராகுல் வலியுறுத்தினார்

ஊரடங்கு நேரத்தில் கொரோனாவை எதிர்கொள்ள முழுமையான திட்டம் தேவை.   ராகுல் காந்தியின் கருத்துக்கள் மத்திய அரசுக்கு மிகப்பெரிய தெளிவைக் கொடுத்திருக்கும் நாட்டுக்கும் பயனளிக்கும்.  ராகுல் காந்தியை அழைத்து பிரதமர் மோடி நேரில் ஒரு முறை கோரோனா வைரஸ் தொடர்பாக ஆலோசிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.“ எனக் கூறி உள்ளது.