பிரதமராகும் அனைத்து தகுதியும் ராகுல் காந்திக்கு உள்ளன : சசி தரூர் புகழாரம்

டில்லி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமராகும் அனைத்து தகுதிகளும் உள்ளதாக முன்னாள் அமைச்சர் சசி தரூர் தெரிவித்துள்ளார்.

பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளையும் இணைக்கும் பணி நடந்து வருகிறது.    இந்நிலையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் ஒரு நிகழ்வில் ராகுல் காந்தியை அடுத்த பிரதமர் வேட்பாளர் என அறிவித்தது சர்ச்சையை உண்டாக்கியது.    இதற்கு எதிர்க்கட்சியினர் பலரும் வரவேற்பு தெரிவித்த போதிலும் ஒரு சிலர் மட்டும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான சசி தரூர் ஒரு பேட்டியில், “சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் மூலம் மக்கள் பாஜகவுக்கு எதிரான மனநிலையில் உள்ளது தெளிவாகி உள்ளது.  இந்நிலையில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்தால்  பாஜகவை நிச்சயம் வெல்ல முடியும்.    இதனால் ஒரு தேசிய கூட்டணை அமைப்பது தற்போதைய தேவை ஆகும்.

தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் தனிக்கட்சியாக வெற்றி பெற்றால் அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் ஆவார்.   அவ்வாறு இல்லாமல் கூட்டணி அரசு அமைந்தால் அனைவரும் சேர்ந்து பிரதமர் குறித்து ஒருமித்த முடிவு ஒன்றை எடுக்கலாம்.   அவ்வாறு வரும் போது காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்தியின் பெயரை பிரதமராக பரிந்துரை செய்வார்கள்.

ஏனென்றால் தற்போதுள்ள நிலையில் ராகுல் காந்திக்கு பிரதமராகும் அனைத்து தகுதிகளும் உள்ளன.  பல விவகாரங்களில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் செயல்பாடுகள் அவர் ஒரு சிறந்த பிரதமராக செயல்படுவார் என்பதை காட்டி உள்ளன.     ஆனால் இது குறித்து 2019 தேர்தல் முடிவுகள் வந்த பிறகு தீர்மானம் செய்யப்படும்.   ஆனால் நான் தனிப்பட்ட முறையில் ராகுல் காந்தி பிரதமராக விரும்புகிறேன்.” என தெரிவித்துள்ளார்.

பல எதிர்க்கட்சி தலைவர்களும் இதே கருத்தை ஏற்கனவே கூறி உள்ளனர். தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லா சமீபத்தில் ராகுல் காந்தியை இனியும் பப்பு (சிறுவன்) என கூறுவது தவறான கருத்து எனவும் அவருடைய சமீபத்திய நடவடிக்கைகள் அவருடைய அறிவு வளர்ச்சியை நன்கு  பிரதிபலித்து அவர் ஒரு தேசிய தலைவர் என்பதை நிரூபித்துள்ளதாக புகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.