ராகுல் காந்தி இந்த நாட்டை வளர்ச்சிக்கு இட்டுச் செல்வார்: மிசா பாரதி

பாட்னா: ராகுல் காந்தியிடம் ஒரு திறமைமிக்க எதிர்கால பிரதமரைப் பார்ப்பதாக கூறியுள்ளார் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகளும், பாட்லிபுத்ரா மக்களவைத் தொகுதியில், ராஷ்ட்ரிய ஜனதா தள் சார்பில் போட்டியிடுபவருமான மிசா பாரதி.

இந்தியாவின் பிரதமர் ஒருவர், தனிநபர் தாக்குதலில் ஈடுபடுவதும், தன்னுடைய அரசியல் எதிரிகளை பகடி செய்வதும் இதுவரை இல்லாத ஒன்று என நரேந்திர‍ மோடியை விமர்சித்துள்ளார்.

ஒரு நேர்காணலில் அவர் கூறியுள்ளதாவது, “இந்த நாட்டின் மாறுபட்ட அம்சங்களை மதிக்கும் நபராகவும், சுதந்திர சிந்தனைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நபராகவும் திகழ்கிறார் ராகுல் காந்தி. அவருள் நான், திறன்வாய்ந்த எதிர்காலப் பிரதமரைக் காண்கிறேன்.

காங்கிரசைப் போன்ற ஒரு பாரம்பரியமான கட்சியை, அவரால் எதிர்காலத்தில் திறம்பட வழிநடத்திச் செல்ல முடியும். இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை அம்சத்தைப் புரிந்துகொண்ட ஒரு மனிதரால் மட்டுமே, நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்ல முடியும்.

ஆனால், இட்டுக்கட்டிய புனைவுகளை புனைந்துகொண்டிருக்கும் நபர்களால் (மோடி), நாட்டை நல்லமுறையில் வழிநடத்திச் செல்ல முடியாது.

பிரியங்கா காந்தியின் முழுநேர அரசியல் வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். அவரின் பழகும் திறன், மக்களிடையே அவர் ஏற்படுத்தும் பாதிப்பு, அசாத்திய நினைவாற்றல் போன்றவை என்னை வியக்க வைக்கின்றன. அவருக்கென்று ஒரு தனிப்பட்ட அரசியல் நயம் உள்ளது” என்றுள்ளார்.

– மதுரை மாயாண்டி

You may have missed