கோராக்பூர்:

உ.பி. மாநிலம் கோராக்பர் பிஆர்டி அரசு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த 70 குழந்தைகள் பரிதாபமாக இறந்தனர். மருத்துவமனை சார்பில் ஆக்சிஜன் விநியோக நிறுவனத்திற்கு பணம் செலுத்தவில்லை. இதனால் அந்த நிறுவனம் ஆக்சிஜன் சப்ளை செய்வதை நிறுத்தியது. இதனால் ஏற்பட்ட ஆக்சிஜன் பற்றாகுறை காரணமாக 70 குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தது.

இந்த துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோரை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார். உடன் ராஜ்யசபா காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் சென்றார்.

ஆக்சிஜன் பற்றாகுறை காரணமாக குழந்தைகள் இறக்கவில்லை என்று ஆளும் பாஜ அரசு தொடர்ந்து கூறி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரி முதல்வர் மற்றும் வார்டு டாக்டர் ஆகியோரை இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

பின்னர் குலாம் நபி ஆசாத் நிருபர்களிடம் கூறுகையில்,‘‘ கோராக்பூர் எம்பி.யாக தற்போதைய முதல்வர் யோகி ஆதித்யாநாத் 5 முறை தேர்வு செய்யப்பட்டார். ஆனால் இந்த மருத்துவமனைக்கு அவர் எதுவுமே செய்யவில்லை’’ என்றார்.

கோராக்பூரில் உள்ள முதல்வர் யோகி முன்னதாக ராகுல்காந்தி வருகையை  விமர்சனம் செய்திருந்தார். கோராக்பூரை சுற்றுலா தளமாக மாற விட மாட்டோம் என்று யோகி கூறியிருந்தார். அதோடு மாநிலத்தின் நிலமைக்கு முந்தைய அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதி ஆட்சியை அவர் குறை கூறினார்.