மாணவர்களுக்கு காங்கிரஸ் கட்சி துணை நிற்கும்: ராகுல் கடிதம்!

டில்லி:

ராகுல் காந்தி மாணவர்களுக்காக எழுதிய கடிதம் ஒன்றை இந்திய தேசிய மாணவர் அணி (NSUI) அதன் அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அந்த கடிதத்தில் மாணவர்கள் சந்தித்து வரும் பிரச்சினை குறித்தும், அவர்களுக்கு காங்கிரஸ் கட்சி துணை நிற்கும் என்றும் தெரிவித்து உள்ளார்.

 

காங்கிரசின் மாணவர் அமைப்பான இந்திய தேசிய மாணவர் அணி (National Students’ Union of India – NSUI) பெஹ்தர் பாரத் (‘Behtar Bharat’) என்னும் பிரச்சாரத்திற்கு தயாராகி வருகிறது. இந்த அமைப்புக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

இன்றைக்கு, விஞ்ஞானம், தொழில்நுட்பம், கலை மற்றும் இலக்கியம் ஆகியவற்றின் மூலம் நாடுகள் முன்னேறுகின்றன. பகுத்தறிவு மற்றும் நீதி ஆகியவற்றைத் தழுவியே சமூகங்கள் முன்னேறுகின்றன. இந்நிலையில், இந்திய மாணவர்கள் இவை அனைத்திலும் முன்னணியில் இருப்பதாக பாராட்டி உள்ளார்.

இருப்பினும், மாணவர்கள் அதிக கட்டணம், சிறந்த கல்லூரிகளில் சேருவதில் சிரமம், படிப்பிற்கு தகுந்த வேலை கிடைப்பது என்பன போன்ற பல போராட்டங்களை சந்திக்கின்றனர்.

எனவே, மாணவர்களோடு சேர்ந்து பணியாற்ற விரும்புவதாக குறிப்பிட்டுள்ள ராகுல் காந்தி, மாணவர் பிரச்சினைகள் தேசிய  பிரச்சினையாக இருப்பதாகவும், மாணவர்களின் முன்னேற்றத்திற்கு இனி காங்கிரஸ் கட்சி உறுதுணையாக இருக்கும் என்றும் உறுதி அளித்துள்ளார்.

தற்போது தொடங்கப்பட்டுள்ள இந்த பெஹத்ர் பாரத் மற்றும் இந்தியாவின் எதிர்காலம் ( ‘Behtar Bharat’/”Future of India”)  என்ற பிரச்சாரத்தின் மூலம்  மாணவர்களின் சிரமங்களை அறிந்து அவற்றை தேசிய செயற் பட்டியலில் ஒரு பகுதியாக இணைக்கப்பட்டு தீர்வு காணப்படும் என்றும் அந்த கடிதத்தில் ராகுல் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ராகுல் காந்தி காங்கிரசின் மாணவர் அமைப்பான NSUI-ல் சேரவும் மற்றும் சிறந்த இந்தியாவை உருவாக்கவும் இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.