யநாடு

யநாடு தொகுதியில் தன்னை காண விரும்பிய கூலி வேலை செய்யும் மூதாட்டியை நேரில் கண்டு ராகுல் காந்தி பரிவு காட்டி உள்ளார்.

கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட ராகுல் காந்தி வருவதற்கு முதல்நாளன்று வயநாடு பகுதியில் பத்திரிகையாளர் இந்துலேகா அரவிந்த் ஒரு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தனது சுற்றுப்பயணத்தில் இந்துலேகா தொகதியில் உள்ள பலதரப்பட்ட மக்களை சந்தித்து கருத்துக்களை கேட்டறிந்தார். அவர் அவ்வாறு ஒரு பஸ் நிலையம் அருகில் உள்ள டீக்கடையில் இருந்த மக்களிடம் கருத்துக்களை கேட்டுக் கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு எல்சீ என்னும் 68 வயது மூதாட்டி  வந்தார். அவர் காப்பி தோட்டத்தில் தினக்கூலியாக வேலை செய்து வருகிறார். அவருக்கு ஆச்துமா மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளதால் மருத்துவரைக் காண நகருக்கு வந்திருந்தார். அவரிடம் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதைக் குறித்து இந்துலேகா கருத்து கேட்டார். அதற்கு அவர் தாம் ராகுலை காண ஆசைப்படுவதாகவும் அதற்கு ரூ.300 செலவாகும் என்பதால் வர முடியாத நிலையில் உள்ளதாக தெரிவித்தார்.

 

மாதம் ரூ.1100 கூலி பெறும் அவரால் திரும்பவும்நகருக்கு வந்து ராகுலை காண முடியாது என்பதை உணர்ந்த இந்துலேகா தனது டிவிட்டரில், “இது 68 வயதான எல்சி. இவர் ஆஸ்துமாவில் அவதிப் படுகிறார். இவர் வீடு வெள்ளத்தால் பாழாகி விட்டது. இவர் மருத்துவரிடம் சிகிச்சை பெற இன்று நகருக்கு வந்தார். இவருக்கு ராகுலை காண விருப்பம் இருந்தும் செலவுக்கு அஞ்சி நாளை மீண்டும் வர முடியாத நிலையில் உள்ளார்” என பதிந்தார்.

 

அன்று மாலை சுமார் 4 மணிக்கு காங்கிரஸ் கட்சியின் மீடியா பொறுப்பாளரும் பிரபல நடிகையுமான ரம்யா எனப்படும் திவ்யா ஸ்பந்தனா இந்துலேகா வுக்கு டிவிட்டரில், “அவருடைய விவரங்களை எனக்கு அனுப்புங்கள் இந்து” என பதில் அளித்திருந்தார். இந்து லேகாவும் அனுப்பி விட்டார்.

அடுத்த நாள் ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் வேட்பாளர் மனு அளிக்க  ஹெலிகாப்டரில் வந்து இறங்கினார். அவரைக் காண வந்த கூட்டம் அலைமோதியது. அந்த கூட்டத்தில் முதலில் எல்சி தனது பேத்தி பிரியா சாஜு மற்றும் கொள்ளுப் பேத்தி தேவிகா வுடன் நின்றிருந்தார். அவர் ராகுல் காந்தியையும் அவர் சகோதரி பிரியங்கா வதேரா காந்தியையும் அருகில் கண்டதுடன் அவர்களின் அன்பு அணைப்பையும் பெற்றார்.

இந்துலேகா அளித்த விவரங்களை ராகுல் காந்திக்கு திவ்யா ஸ்பந்தனா தெரிவித்துள்ளார். ராகுல் உத்தரவுக்கிணங்க காங்கிரஸ் பொதுச் செயலர் வேணுகோபால் கேரளாவில் உள்ள எல்சி மற்றும் அவர் பேத்தியை தனது குழுவினர் மூலம் அழைத்து வந்து ஹெலிபேட் முதல் வரிசையில் நிறுத்து வைத்துள்ளார். ராகுலின் இந்த பரிவுச் செயல் கேரள மக்களின் உள்ளத்தை கவர்ந்துள்ளது.