டில்லி

ன்று ராஜிவ் காந்தியின் 75 ஆம் பிறந்த தினத்தையொட்டி அவர் மகன் ராகுல் காந்தி அவரை நினைவு கூர்ந்துள்ளார்.

இன்று நாடெங்கும் மறைந்த இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தியின் 75 ஆம் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் கணினி வளர்ச்சிக்கு அடிக்கல் நாட்டியவர் ராஜிவ் காந்தி என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் விமான ஓட்டியாக இருந்த ராஜிவ் காந்தி தனது சகோதரர் சஞ்சய் காந்தி மறைவுக்குப் பிறகு அரசியலில் நுழைந்தார். அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு அவர் இந்தியப் பிரதமர் ஆனார்.

மக்களவை தேர்தல் பிரசாரத்தின் போது தமிழகத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் நகரில் பிரசாரம் செய்ய வந்த போது அவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மனித வெடிகுண்டு தாக்குதலில் மரணம் அடைந்தார். அவரது மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு என உலக மக்கள் அனைவரும் வருத்தம் தெரிவித்தனர்.

இன்று அவருடைய பிறந்த நாளையொட்டி அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி வதேரா, மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்தினர்.

ராகுல் காந்தி தனது தந்தை ராஜிவ் காந்தியின் பிறந்த தினத்தையொட்டி தனது டிவிட்டரில்> இன்று நாம் தேசபக்தர் மற்றும் எதிர்கால இந்தியாவை உருவாக்கப் பாடுபட்ட வருமான ராஜிவ் காந்தி அவர்களின் 75 ஆம் பிறந்த நாளை கொண்டாடி வருகிறோம். எனக்கு அவர் அன்பான தந்தையாக மட்டுமின்றி யாரையும் வெறுக்கக் கூடாது,  அனைவரையும் மன்னித்து அன்பு செலுத்த வேண்டும் என்பதை சொல்லிக் கொடுத்த ஆசானாக உள்ளார்.” எனப் பதிந்துள்ளார்.