உ.பி. அரசு தடை: பொதுமக்களுடன் நொய்டாவில் இருந்து ஹத்ராஸ் நகருக்கு நடந்தே செல்லும் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி…

லக்னோ: உ.பி.மாநிலத்தில்  பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த தலித் இளம்பெண்ணின் ஊரான  ஹத்ராஸ் நகரில் யோகி அரசு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ள நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மற்றும், உ.பி. மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர்,  நொய்டாவில் இருந்து பொதுமக்களுடன் யமுனா சாலை வழியாக நடந்து செல்கின்றனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் தலித் இளம்பெண் உயர்ஜாதியினரைக் கொண்ட 4 பேர் கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில்,  இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், உயிரிழந்த இளம்பெண்ணின் உடலை, அந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் ஊர் மக்களின் எதிர்ப்பை மீறி, காவல்துறையினரே நள்ளிரவில் தகனம் செய்தனர். இது மேலும் சந்தேகங்களை எழுப்பி உள்ளது.

இந்த கொடூர வழக்கில் கைதான 4 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கக்கோரி, குரல் வலுத்து வருகிறது. நாடு முழுவதும் போராட்டங்களும் நடைபெற்று வருகிறது. முதல்வர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெறுகிறது.

இந்நிலையில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திடம் போனில் பேசிய பிரியங்கா, அவர்களை சந்திக்க இன்று வருவதாக கூறியிருந்தார். அதன்படி, தனது சகோதரர் ராகுல்காந்தியுடன்  சந்திப்பதற்காக வாகனத்தில் டெல்லியில் இருந்து புறப்பட்டு  வந்தார். அவரை மாநில எல்லையான யமுனா நெடுஞ்சாலையில்  காவல்துறை யினர் தடுத்து நிறுத்தினர். அவர்களது வாகனம் உள்ளே அனுமதி அனுமதி மறுக்கப்பட்டது.

இதனையடுத்து வாகனத்தில் இருந்து இறங்கி  நொய்டாவில் இருந்து ஹத்ராஸ் நகருக்கு இருவரும் நடந்தே செல்கின்றனர். ’உயிரிழந்த பெண்ணுக்கு நியாயம் கிடைப்பதற்காக, இரண்டு, மூன்று நாட்கள் ஆனாலும் ஹத்ராஸிற்கு நடந்தே செல்வேன்’ என பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.  அவருடன் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் உடன் செல்கின்றனர்.

இது நாடு முழுவதும் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.