டில்லி

கேரளாவில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் விவசாயக் கடனை திருப்பி செலுத்தும் தேதியை டிசம்பர் 31 வரை நீட்டிக்க ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கேரள மாநிலத்தில் தொடர்ந்து இரண்டு வருடங்களாக கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த இரு வெள்ளங்களிலும் ஏராளமான பாதிப்புக்கள் உண்டாகி இருக்கின்றன. இதனால் மாநிலத்தில் பல விவசாயப் பயிர்கள் தொடர்ந்து இரண்டாம் வருடமாக பாழாகி உள்ளது. இதனால் விவசாயக் கடனைத் திருப்பி செலுத்த முடியாத நிலையில் பல விவசாயிகள் உள்ளனர். ஒரு சில இடங்களில் விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர்.

வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினரும் முன்னாள் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாசுக்கு எழுதி உள்ள கடிதத்தில், “சுமார் ஒரு வருடம் முன்பு இந்த நூற்றாண்டில் ஏற்படாத அளவு கடும் வெள்ளத்தைக் கேரளா சந்தித்தது. இந்த வெள்ளம் காரணமாகப் பல விவசாயிகளின் பயிர்கள்  அழிந்துள்ளன. இதனால் அவர்களுக்கு கோடிக்கணக்கான நஷ்டம் ஏற்பட்டது. அதையொட்டி அவர்களால் விவசாயக் கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை உண்டானது.

இதனால் கேரள விவசாயிகளில் சிலர் தற்கொலை செய்துக் கொள்ளும் நிலை உண்டானது. இந்நிலையில் தற்போது மீண்டும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இது விவசாயிகளின் துன்பத்தை மேலும் அதிகரித்துள்ளது. இது குறித்து  மாநில அரசு ஏற்கனவே தகவல்கள் அளித்துள்ளது. அத்துடன் எதிர்க்கட்சிகளின் சார்பில் விவசாயக் கடனைத் திருப்பி செலுத்தும் தேதியை இந்த வருடம் டிசம்பர் மாதம் 31 வரை நீட்டிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது.

ஆனால் அந்த கோரிக்கையை ஏற்க மாநில வங்கியாளர் குழு மறுப்பு தெரிவித்துள்ளது. எனவே நீங்கள் இதில் தலையிட்டு விவசாயிகளுக்கு நலம் தரும் நடவடிக்கைகளை எடுத்தால் நான் மிகவும் நன்றி உள்ளவனாக இருப்பேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.