கைலாஷ் யாத்திரை செல்ல ராகுல் காந்தி சிறப்பு அனுமதி கேட்டு கோரிக்கை

டில்லி:

கைலாஷ் யாத்திரை செல்ல தனக்கு  சிறப்பு அனுமதி அளிக்கும்படி மத்திய அரசுக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு செல்ல முன்பதிவு கடந்த பிப்ரவரி மாதம் 20ந்தேதி தொடங்கி மார்ச் 20ந்தேதி முடிவடைந்து விட்டது. இந்த நிலையில், தற்போது ராகுல்காந்தி கைலாஷ் யாத்திரைக்கு அனுமதிக்கும்படி  கோரிக்கை விடுத்துள்ளார்.

ஏற்கனவே நடைபெற்று முடிந்த கர்நாடக தேர்தல் பிரசார சமயத்தில், கர்நாடகாவுக்கு ராகுல் காந்தி விமானத்தில் சென்று கொண்டிருக்கும் போது, நடுவானில் திடீரென விமானம் சரிந்ததுடன், 8 ஆயிரம் அடியில் இருந்து விமானம் கீழாக பறந்து பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், அந்த விமானம் எந்தவித பாதிப்புமின்றி  விபத்தில்லாமல் நல்லபடியாக தரையிறங்கியது.

அந்த சமயத்தில், அதில் பயணம் செய்த ராகுல்காந்தி  நடுவானில் ஏற்பட்ட தடங்கலில் இருந்து தப்பியதால்  கைலாஷ் மானசரோவருக்கு யாத்திரை வருவதாக வேண்டிக்கொண்டதாக  கூறப்பட்டது.

அதை நிறைவேற்றும் வகையில், கைலாஷ் யாத்திரை செல்ல ராகுல்காந்தி முடிவு செய்திருப்ப தாகவும்,  நடுவானில் ஏற்பட்ட தடங்கலில் இருந்து தப்பியதற்கு நன்றி தெரிவிப்பதற்காக கைலாஷ் மானசரோவருக்கு ராகுல் காந்தி பயணம் மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

அதன் காரணமாகவே தற்போது கைலாஷ் யாத்திரைக்கு அனுமதி கோரியிருப்பதாக கூறப்படு கிறது. அதற்காக பணிகளை காங்கிரஸ் கட்சி முன்னெடுத்து வருகிறது.

ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம்  டில்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற  ‘ஜன் ஆக்ரோஷ்’ பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி,  தனது மனதில் உள்ளதை  உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் என்றும், தான்   கைலாஷ் மானசரோவருக்கு செல்வதற்காக தனக்கு 10 முதல் 15 நாட்கள் விடுமுறை தேவை என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.