டில்லி

பிரியங்கா காந்தியின் செயலாளராக நியமிக்கப்பட்ட குமார் ஆஷிஷ் என்பவர் ராகுல் காந்தியால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் பொது செயலராகவும் உத்திரப் பிரதேச மாநில கிழக்குப் பகுதியின் பொறுப்பாளராகவும் பிரியங்கா காந்தியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நியமித்துள்ளார்.   விரைவில் நடைபெற உள்ள மக்களவை தேர்தலை முன்னிட்டு பிரியங்கா காந்தி பணியில் இறங்கி உள்ளார்.

உத்திரப் பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களை அவர் நேர்காணல் நடத்தி உள்ளார்.   அவருக்கு உதவ  காங்கிரஸ் கட்சி குமார் ஆஷிஷ் என்பவரை செயலாளராக நியமித்துள்ளது.   குமார் ஆஷிஷ் மீது கடந்த 2005 ஆம் வருடம் கேள்வித்தாள் வெளியானது குறித்து குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதை ஒட்டி காங்கிரஸ் பிரமுகர்கள் பலர் அவர் நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.   குமார் ஆஷிஷ் தன் மீது எந்த ஒரு வழக்கும் பதியப்படவில்லை எனவும் இது அரசியல் சதி எனவும் பதில் அளித்துள்ளார்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் வேணுகோபால் தமது அறிவிப்பில் ராகுல் காந்தி செயலாளர் பதவியில் குமார் ஆஷிஷ் ஐ விலக்கி விட்டு அவருக்கு பதிலாக சச்சின் நாயக் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.