காங்கிரஸை காங்கிரஸே தோற்கடித்துள்ளது : ராகுல் மன வருத்தம்

சிம்லா

மாசலப் பிரதேசத்தில் காங்கிரஸ் தோல்விக்கு காங்கிரஸே காரணம் என ராகுல் காந்தி கூறி உள்ளார்.

சமீபத்தில் காங்கிரஸ் தலைவராக பதவி ஏற்ற ராகுல் காந்தி, இமாசலப் பிரதேசம் சென்றுள்ளார்.   அங்கு சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வி குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.    இந்தக் கூட்டத்தில் இமாசலப் பிரதேச காங்கிரஸ் தலைவர்களும்,  மாநிலப் பார்வையாளர்களும் கலந்துக் கொண்டு விவாதித்தனர்.

விவாதங்களைக் கேட்ட பின் ராகுல் காந்தி உரையாற்றினார்.   ராகுல் தனது உரையில்,  “காங்கிரஸ் கட்சி ஒற்றுமையாக இருந்ததால் தான் குஜராத்தில் அதிக இடங்களை கைப்பற்ற முடிந்தது.    ஆனால் இமாசலப் பிரதேசத்தில் சுக்விந்தர் சிங் மற்றும் வீர்பத்ர சிங் ஆகிய இரு கோஷ்டிகளின் மோதலால் காங்கிரஸை காங்கிரஸே தோற்கடித்துள்ளது.   நாம் ஒற்றுமையாக இருந்திருந்தால் நிச்சயம் பெருமளவில் வெற்றி பெற்றிருப்போம்.

இனியாவது கோஷ்டி மோதலை விட்டுவிட்டு கட்சியின் வெற்றிக்கு அனைவரும் போராட வேண்டும்.   அதை விடுத்து கட்சிக்கு எதிராக நடப்பவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.   அது அமைச்சராக இருந்தாலும் சரி,  சாதாரண தொண்டனாக இருந்தாலும் அதே நிலைதான்.    ஆட்சியில் இருக்கும் போது பல மூத்த தலைவர்கள் கட்சித் தொண்டர்களுடன் இணைந்து செயல்படவில்லை.   அது குறித்து எனக்குத் தகவல்கள் வந்துள்ளன.” என எச்சரிக்கை விடுத்தார்.

அத்துடன் கூட்டத்துக்கு தாமதமாக வந்து தன்னை தடுத்த பெண் போலீசை கன்னத்தில் அறைந்த ஆஷாகுமாரிக்கு ராகுல் கண்டனம் தெரிவித்தார்.  அவர், “நாம் காந்தி வழியில் நடப்பவர்கள்.  இங்கு கோபம்,  ஆத்திரம் மற்றும் வன்முறை அங்கீகரிக்கப்படவில்லை.     இது காங்கிரஸ் கட்சியின் கலாச்சாரம் இல்லை.  இது நடந்திருக்கக் கூடாது” என கூறி உள்ளார்.