ஐதராபாத்:

‘‘அடுத்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க முன்னுரிமை அளிக்கப்படும்’’ என்று ராகுல்காந்தி கூறினார்.

ஆந்திராவில் இருந்து பிரித்து தெலங்கானா மாநிலம் 2014ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதையடுத்து ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்ப்டடு வருகிறது. சிறப்பு அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வாக்குறுதி அளித்தது.

இந்நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தற்போது நடந்து வருகிறது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி தெலுங்கு தேச எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல்காந்தி கூறுகையில், ‘‘ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என்பது எங்களது எண்ணம்.

2019ல் ஆட்சிக்கு வந்தவுடன் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது முதல் பணியாக இருக்கும். நாம் ஒன்றாக இருந்தால் இது சாத்தியம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. மாநில மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும்படி மத்திய அரசையும், மோடியையும் வலியுறுத்துவோம்’’ என்றார். இதன் மூலம் அடுத்த லோக்சபா தேர்தல் கூட்டணிக்கு தெலுங்கு தேசம் கட்சியை இழுக்க ராகுல்காந்தி காய்களை நகர்த்துவதாக கருத்து எழுந்துள்ளது.

‘‘சிறப்பு அந்தஸ்து பெறுவது மாநிலத்தில் உரிமை. அது வரை போராட்டம் தொடரும்’’ என்று பாஜக.வுடன் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேச கட்சி முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். ‘‘கடந்த மூன்றரை ஆண்டுகளில் ஆந்திரா பல்வேறு வளர்ச்சியை அடைந்துள்ளது. எனினும், 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்க வழிவகை செய்யப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டிய கடமை உள்ளது’’ என்று நாயுடு தெரிவித்துள்ளார்.