உன்னாவோ கற்பழிப்பு சம்பவம் – பாரதீய ஜனதா மீது தாக்குதல் தொடுத்த ராகுல் காந்தி

--

புதுடெல்லி: ‘பாரதீய ஜனதா சட்டமன்ற உறுப்பினர் உங்களை வன்புணர்வு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டால் கேள்வி எழுப்பாதீர்கள்’ என்று கூறி, பாரதீய ஜனதாக் கட்சியின் மீது தாக்குதல் தொடுத்துள்ளார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.

மேலும், மோடி அரசின் பெண் கல்வி திட்டமான ‘beti Bachao-Beti Padhao (பெண் குழந்தையை பாதுகாத்து கல்வியளித்திடுதல்) என்பதையும் இந்த சம்பவத்தோடு சேர்த்து குறிப்பிட்டுள்ளார் ராகுல் காந்தி.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் நடந்த உன்னாவோ கற்பழிப்பு வழக்கில் பாதிக்கப்பட்ட பதின்ம வயது பெண், தனது உறவினர்கள் மற்றும் வழக்கறிஞருடன், சிறையில் இருக்கும் தனது மற்றொரு உறவினரைப் பார்ப்பதற்காக ஒரு காரில் சென்றுகொண்டிருந்தபோது, எண் பலகை மறைக்கப்பட்ட ஒரு டிரக் அந்த காரின் மீது மோதியது.

இதில், உறவுப் பெண்கள் இருவர் இறந்துவிட, வழக்கறிஞரும், பாதிக்கப்பட்ட பெண்ணும் மோசமாக காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தையடுத்து, மாநிலத்தை ஆளும் பாரதீய ஜனதா அரசின் மீது எதிர்க்கட்சிகள் நேரடியாக குற்றம் சாட்டி வருகின்றன.

குற்றம்சாட்டப்பட்ட அந்த சட்டமன்ற உறுப்பினர் சிறையில் இருக்கிறார். பேங்கர்மாவ் சட்டசபை தொகுதியிலிருந்து 4 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட பாரதீய ஜனதாவின் குல்தீப் செங்கார்தான் குற்றம் சாட்டப்பட்டவர். உத்திரப் பிரதேச முதல்வர் யோகியின் வீட்டிற்கு முன்பாக பாதிக்கப்பட்ட பெண், தீக்குளிக்க முயன்றபோதுதான் இந்த சம்பவம் வெளியுலகிற்கு தெரிய வந்தது.