சிறப்பாக பணியாற்றிய எம்.பி.க்கள் குறித்து கருத்துக்கணிப்பு : ராகுல் காந்தி, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோருக்கு முக்கிய இடம்

 

புதுடெல்லி :

கொரோனா பரவல் நேரத்தில் மக்களுக்கு மிகவும் உதவிகரமாக செயல்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார் என்ற தகவலை டெல்லியை சேர்ந்த கவர்ன்-ஐ சிஸ்டம்ஸ் என்ற நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது.

அக்டோபர் 1 முதல் அக்டோபர் 15 வரை இணையத்தளம் வாயிலாக கவர்ன்-ஐ சிஸ்டம்ஸ் நடத்திய வாக்கெடுப்பில், 512 எம்.பி.க்களுக்கு மொத்தம் 33,82,560 பேர் தங்கள் கருத்தை பதிவு செய்திருந்தனர்.

இதில், மத்திய பிரதேசத்தை சேர்ந்த உஜ்ஜைன் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் அணில் பிரோஜியா (பா.ஜ.க.) முதலிடம் பெற்றார்.

கொரோனா நேரத்தில் சிறப்பாக பணியாற்றிய ராகுல் காந்தியை 40,000 பேர் தேர்ந்துடுத்து இருந்தனர், இவருக்கு மூன்றாவது இடம் கிடைத்தது. இரண்டாவது இடத்தை, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் அதல பிரபாகர ரெட்டி பிடித்தார்.

தமிழகத்தை சேர்ந்த தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. முதல் பத்து இடங்களில் இடம் பிடித்தார், இவருக்கு இந்த பட்டியலில் 9 வது இடம் கிடைத்தது, நிதின் கட்கரி-க்கு பத்தாவது இடம் கிடைத்தது.

அதிக வாக்குகள் பெற்ற 25 நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்து, அவர்களின் தொகுதிக்கு நேரடியாக சென்று நடத்தப்பட்ட இரண்டாவது கட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் இந்த 10 அடங்கிய பட்டியல் தயாரிக்க பட்டது.

இதில், வயநாடு தொகுதியில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் கொரோனா பரவல் நேரத்தில் ராகுல் காந்தி ஆற்றிய பணியையும், அவரது உதவியையும் மக்கள் வெகுவாக பாராட்டினர்.

மஹுவா மொய்த்ரா – கிருஷ்ணநகர், மேற்கு வங்கம் (ஏ.ஐ.டி.சி), எல் எஸ் தேஜஸ்வி – பெங்களூர் தெற்கு, கர்நாடகா (பாஜக), ஹேமந்த் துக்காராம் கோட்சே – நாசிக், மகாராஷ்டிரா (எஸ்.எஸ்.), சுக்பீர் சிங் பாடல் – ஃபெரோஸ்பூர், பஞ்சாப் (எஸ்ஏடி), ஷங்கர் லால்வானி – இந்தூர், மத்தியப் பிரதேசம் (பாஜக) ஆகியோர் முறையே 4 முதல் 8 வரையிலான இடங்களை பிடித்தனர்.

தங்கள் தனிப்பட்ட பாதுகாப்பை பெரிதாக கருதாமல் மக்களுக்கு உதவி செய்த இந்த பத்து பேரிடமும், சவாலான நேரங்களில் செயல்படுவது எப்படி என்பது குறித்தும் இந்தியாவை எப்படி முன்னோக்கி எடுத்து செல்வது என்பது குறித்தும் விவாதிக்க இருப்பதாக இன்று இந்த புள்ளிவிவரங்களை வெளியிட்டபின் கவர்ன்-ஐ சிஸ்டம்ஸ் திட்ட தலைவர் மஞ்சுநாத் கேரி தெரிவித்தார்.