மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தல்: செப்டம்பரில் ராகுல் தேர்தல் பிரசாரம் தொடக்கம்

--

போபால்:

த்திய பிரதேச சட்டமன்ற  தேர்தலை முன்னிட்டு, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய பிரதேச மாநிலம் ஓம்காரேஸ்வரர் காவிலில்  இருந்து தேர்தல் பிரசாரத்தை வரும் செப்டம்பர் மாதம் தொடங்குகிறார்.

இந்த ஆண்டு இறுதியில் பாஜக ஆளும் மாநிலங்களான மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், பாஜக ஆளும் மாநிலமான மத்திய பிரதேசத்தில் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதே வேளையில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாரதிய ஜனதாவும் இப்போதே களமிறங்கி வேலை செய்து வருகிறது.

இந்த நிலையில், மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தல் தொடர்பாக  ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமை தாங்கினார். இந்த   ஆலோசனை கூட்டத்தில், மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத், முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங், மாநில தேர்தல் பிரச்சாரக் குழுவின் தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா, எதிர்க்கட்சித் தலைவர் அஜய் சிங், முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் பச்சவுரி, ராஜ்யசபா எம்.பி. விவேக் தங்கா, மூத்த எம்எல் மற்றும் முன்னாள் அமைச்ச்ர ராம் நிவாஸ் ராவத், செயல்தலைவர் ஜீத்து பட்வாரி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பொறுப்பு தீபக் பபரியா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி,  அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தனது தேர்தல் பிரசாரத்தை செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்குகிறார்.

மத்தியபிரதேசத்தில் உள்ள பிரபல சிவன் கோவிலான ஓம்காரேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை செய்துவிட்டு, தனது சாலை வழி பிரசார யாத்திரையை தொடங்க உள்ளார் ராகுல்காந்தி.   இதற்கான ஏற்பாடுகளை காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர்.

ஏற்கனவே குஜராத் சட்டமன்ற தேர்தலின்போது,  ராகுல்காந்தியின் சாலை வழி தேர்தல் பிரசார யாத்திரை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதன் காரணமாக பாஜகவுக்கு கடுமையான  நெருக்கடிகளை ராகுல்காந்தி கொடுத்து வந்தார். தற்போது அதுபோல சாலை வழி தேர்தல் பிரசார யாத்திரையை மத்திய பிரதேசத்திலும் ராகுல் காந்தி மேற்கொள்ள உள்ளார். இந்த யாத்திரையுன்போது மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத் மற்றும், குணா பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிராதித்யா சிந்தியா ஆகியோர் உடன் செல்வார்கள் என்று கூறப்படுகிறது.

மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத் இன்று தனது தேர்தல் பிரசார பயணத்தை தொடங்குகிறார். சாத்னா  மாவட்டத்தில் உள்ள மெய்கர் மாதா கோவிலில் சிறப்பு பூஜை செய்துவிட்டு அந்த பகுதியில் உள்ள மெய்கர் மற்றும் ராஜ்நகர் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தல் தொடர்பாக, மாநிலத்தில் 60 லட்சம் போலி வாக்காளர்கள் இருப்பதாக காங்கிரஸ் கட்சி சார்பில் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள் ளது.

அதில், கடந்த 10 ஆண்டுகளில் மத்திய பிரதேச மாநிலத்தின் மக்கள் தொகையே 24% தான் அதிகரித்துள்ளது. ஆனால் வாக்காளர்களின் எண்ணிக்கை 40% உயர்ந்திருப்பது விசித்திரமாக இருப்பதாக மாநில காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இந்த புகாரின் பேரில், தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.