ஜம்மு காஷ்மீருக்கு இன்று ராகுல் காந்தி பயணம்!

டில்லி:

சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு பலத்த பாதுகாப்பில் உள்ள ஜம்மு காஷ்மீருக்கு முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவர்  ராகுல் காந்தி செல்கிறார். அதைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர்களும் காஷ்மீர் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு யூனியன் பிரதேசமாக பிரிக்கப் பட்டு உள்ள நிலையில், அங்கு ராணுவத்தினர் குவிக்கப்பட்டு பல இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அம்மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுக்காவலில் சிறை வைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது சிறிது சிறிதாக இயல்புநிலை திரும்பி வருகிறது.

ஏற்கனவே காஷ்மீர் மக்களையும், அங்கு வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சித் தலைவர்களையும்  நேரில் சந்திக்க  காஷ்மீர் செல்ல முயன்ற மூத்த காங்கிரஸ் கட்சித் தலைவர் குலாம்நபி ஆசாத், கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்கள் போன்றோர் விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில்,இன்று ராகுல்காந்தி காஷ்மீர் செல்வதாக கூறப்படுகிறது.  இது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. காஷ்மீருக்கு செல்ல அனுமதிக்க கோரி ஏற்கனவே பல முறை ராகுல் கோரிக்கை விடுத்த நிலையில், காஷ்மீர் கவர்னர் சத்யமாலிக் அவருக்கு அனுமதி வழங்கி இருந்தார். இதைத்தொடர்ந்து ராகுல் காந்தி காஷ்மீர் செல்வதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து   இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ராஷ்டிரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்க்கட்சியை சேர்ந்த  எதிர்க்கட்சி தலைவர்கள் காஷ்மீருக்கு செல்லவுள்ளதாக கூறி உள்ளனர்.

இதற்கிடையில் ஜம்மு-காஷ்மீர் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஷ்மீர் வரும் தலைவர்கள்  பள்ளத்தாக்குக்கு செல்ல வேண்டாம். என்றும், அது காஷ்மீர் மக்களின் அமைதி மற்றும் சாதாரண வாழ்க்கையை படிப்படியாக மீட்டெடுப்பதற்கு இடையூறு விளைவிக்கும் என்பதால் தலைவர்கள் அதை தவிர்க்க வேண்டும்,   பல பகுதிகளில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறும் வகையில் இருக்கும் என்று தெரிவித்து உள்ளது.