நாளை வயநாடு செல்கிறார் ராகுல் காந்தி

வயநாடு:
காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி 3 நாள் பயணமாக தனது சொந்தத் தொகுதியான வயநாடுக்கு நாளை செல்லவிருக்கிறார்.

வயநாட்டில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அவர் இந்த பயணத்தை மேற்கொள்ளவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாளை தில்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் 11.30 மணிக்கு கோழிக்கோடு சென்றடைகிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக மலப்புரம் செல்லும் அவர், 12.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் கரோனா பாதிப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

பின்னர் அங்கிருந்து புறப்படும் அவர், செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் வயநாடு தொகுதியை பார்வையிடுகிறார். செவ்வாய்கிழமை வயநாடு மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டத்திலும், புதன்கிழமை மனந்தவாடி அரசு மருத்துவமனைக்குச் செல்கிறார். பின்னர் கண்ணூர் விமான நிலையம் செல்லும் ராகுல்காந்தி அங்கிருந்து சிறப்பு விமானம் மூலம் தில்லி திரும்புகிறார்.