முதல்வர்களை தேர்வு செய்ய ‘மொபைல் ஆப்’ மூலம் தொண்டர்களின் கருத்துக் கேட்கும் ராகுல்!

சட்டமன்ற தேர்தலில் வெற்றிப்பெற்றதன் மூலம் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களின் முதலமைச்சர்களை தேர்வு செய்வதில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி புதிய யுக்தியை மேற்கொண்டுள்ளார். அதாவது, மொபைல் ஆப் மூலம் தங்களின் முதல்வரை தேர்வு செய்யும் உரிமையை கட்சி தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் ராகுல் காந்தி அளித்துள்ளார்.

rahul

கடந்த மாதம் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. நேற்று முன் தினம் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களை காங்கிரஸ் கைப்பற்றியது.

ராஜஸ்தான் முதல்வர் பதவிக்கு முன்னாள் முதலமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான அசோக் கெலாட் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் ஆகியோரிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதேபோல், மத்தியபிரதேசத்தில் மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கம்ல்நாத் மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் ஆதித்ய சிந்தியா, திக்விஜய்சிங் ஆகியோருடன் போட்டி நில்வுகிறது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் எம்பி தாம்ரத்வாஜ் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் பூபேஷ்பாகேல், மூத்த தலைவர் டி.எஸ். சிங்தேவ் இடையே முதல்வர் பதவிக்கான போட்டி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வெற்றிப்பெற்ற மூன்று மாநிலங்களிலும் முதலமைச்சர்களை தேர்வு செய்வதில் ராகுல் காந்திக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

shakti

இதில் ராகுல் காந்தி புதிய யுக்தியை கையாண்டுள்ளார். மாநிலத்தின் முதல்வரை தேர்வு செய்யும் உரிமையை எம்.எல்.ஏ.க்கள் மட்டுமின்றி மாநில காங்கிரஸ் தொண்டர்களின் கருத்தையும் கேட்க ராகுல் முடிவு செய்துள்ளார். வெற்றிப்பெற்ற 3 மாநிலங்களில் கிட்டத்தட்ட 7 லட்சம் காங்கிரஸ் தொண்டர்கள் உள்ளனர். அவர்களிடம் மொபைல் ஆப் மூலம் ராகுல் காந்தி கருத்து கேட்க உள்ளார்.

இதற்காக காங்கிரஸ் கட்சிக்காக ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள ‘சக்தி’ என்ற பெயரில் மொபைல் ஆப் செயலியை பயன்படுத்த ராகுல்காந்தி திட்டமிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் ‘சக்தி’ என்ற அப்ளிக்கேஷனில் சென்றதும் முதலில் ராகுல்காந்தியின் உரை இடம்பெறுகிறது. அதன்பிறகு, முதல்வராக யாரை தேர்வு செய்யலாம் என்ற கருத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

அதில் முதல்வராக யாரை தொண்டர்கள் விரும்புகிறார்களோ அவரது பெயரை ‘டிக்’ செய்தால் போதும். இதில் மெஜாரிட்டி அடிப்படையில் அந்தந்த மாநில முதலமைச்சர் தேர்வு செய்யப்படுவார். அதன்பின்னர் இறுதி முடிவை ராகுல் காந்தி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.