திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து உடல் நலம் விசாரிக்க ராகுல் காந்தி காவிரி மருத்துவமனை வந்தார்.

குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக திமுக தலைவர் கருணாநிதி கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில் சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள காவிரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஞாயிற்றுக்கிழமை இரவு அவர் உடல் நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டு மீண்டும் சரியானது. அவருக்கு  தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

 

அவர் உடல் நிலை குறித்து விசாரிக்க மாநில மற்றும் தேசிய அரசியல் தலைவர்கள் மருத்துவமனைக்கு வந்தபடி இருக்கின்றனர்.  துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும்  கருணாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தனர். காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தும் மருத்துவமனை சென்று கருணாநிதி நலம் விசாரித்தார்.

 

இந்த நிலையில், இன்று மாலை 4.18 மணிக்கு காவிரி மருத்துவமனைக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி வந்தார்.  முன்னதாக 3.30 மணியளவில் அவர் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு பயணிகள் விமானத்தில் வந்திறங்கினார். காங்கிரஸ் மேலிடபொறுப்பாளர் முகுல் வாஸ்னிக்கும் அவருடன் வந்தார்.

விமான நிலையத்தில் அவரை தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் தலைவர்  ஈவிகேஎஸ் இளங்கோவன், பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட தலைவர்கள் அவர்களை வரவேற்றனர். கடந்த ஆண்டு காவிரி மருத்துவமனையில் கருணாநிதி சிகிச்சை பெற்றபோதும், ராகுல் காந்தி நேரில் வந்து நலம் விசாரித்திருந்தார். கொட்டும மழைக்கு நடுவே காவிரி மருத்துவமனை வெளியே, காங்கிரஸ், திமுக தொண்டர்கள், வாழ்த்து முழக்கங்களை எழுப்பி வருகிறார்கள்.

 

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: rahul-gandhi-visit-kauvery-hospital-at-4-pm-enquire-karunanidhi-health, திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து உடல் நலம் விசாரிக்க ராகுல் காந்தி காவிரி மருத்துவமனை வந்தார்.
-=-