கேரளா வெள்ள பாதிப்பு….ராகுல்காந்தி 28ம் தேதி பார்வையிடுகிறார்

டில்லி:

கேரளா வெள்ள பாதிப்புகளை வரும் 28ம் தேதி ராகுல்காந்தி பார்வையிடுகிறார்.

கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் மக்கள் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர். மழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் கேரளாவில் இதுவரை 372 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளது. இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பெரும் பேரழிவில் இருந்து கேரளாவை மீட்டெடுக்க பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன. இந்நிலையில், கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரும் 28ம் தேதி பார்வையிட உள்ளார் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இது குறித்து காங்கிரஸ் கட்சியினர் கூறுகையில், ‘‘கேரளாவில் சமீபத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் சேதமடைந்த பகுதிகளை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரும் 28-ம் தேதி பார்வையிட உள்ளார். வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ள செங்கண்ணூர், ஆலப்புழா, அங்கமாலி பகுதிகளை 28ம் தேதி பார்வையிடுகிறார். 29-ம் தேதி வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட வயநாடு மாவட்டத்தை ராகுல் பார்வையிடுகிறார்’’ என்றனர்.