தேர்தல் அறிக்கைக்கு கட்சி உறுப்பினர்கள் உதவி தேவை : ராகுல் காந்தி

டில்லி

ரும் 2019 பொதுத் தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிக்க கட்சி உறுப்பினர்கள் உதவியை ராகுல் காந்தி கோரி உள்ளார்.

வரும் 2019 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான பணிகளை அனத்துக் கட்சிகளும் தொடங்கி விட்டன.  பாஜகவுக்கு எதிராக கூட்டணி உருவாக்கும் முயற்சியில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.  ஏற்கனவே உள்ள கூட்டணியை தக்க வைத்துக் கொள்ள பாஜக பாடுபட்டு வருகிறது.

காங்கிரஸ் கட்சி வரும் 2019ஆம் ஆண்டு பொதுத் தேர்த்லுக்கான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியை தொடங்கி விட்டது.   இதற்கான கூட்டம் டில்லியில் நடைபெற்றது.   இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்துக் கொண்டார்.

இக்கூட்டத்தின் போது  மற்றொரு தலைவரான சசி தரூர் ராகுல் காந்தி உடன் இருந்தார்.   இருவருக்கும் இடையில் மனத் தாங்கல் எனக் கூறப்பட்ட நிலையில் இருவரும் இணைந்து காணப்பட்டனர்.   இதன் மூலம் இருவரும் சமாதானம் ஆகி விட்டதாக காங்கிரஸ் தொண்டர்கள் புரிந்துக் கொண்டனர்.

இந்த கூட்டத்தில்  உறுப்பினர்கள் குழு ஒன்றை ராகுல் காந்தி அமைத்து, அந்தக் குழு காங்கிரஸ் கட்சிக்கான தேர்தல் அறிக்கையை தயார் செய்ய உள்ளதாக அவர் தெரிவித்தார்.   மேலும் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் அந்தக் குழுவினருக்கு தேர்தல் அறிக்கை தயாரிக்க உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.