நீட் தேர்வு மாணவர்களின் தகவல் விற்கப்பட்டதா ? ராகுல் பரபரப்பு புகார்

டில்லி

நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் தகவல்கள் இணையதளங்களுக்கு விலைக்கு அளிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.

மருத்துவக் கல்வியில் சேர விரும்பும் மாணவர்களுக்கான நீட் நுழைவுத் தேர்வு சி பி எஸ் இ மூலம் கடந்த மே மாதம் 6 ஆம் தேதி நடந்தது.   இந்த தேர்வின் முடிவுகள் கடந்த மாதம் வெளியானது.   இந்த நீட் தேர்வில் தமிழில் அளிக்கப்பட்ட கேள்விகளில் பல குழறுபடிகள் இருந்ததாக சர்ச்சை எழுந்து தற்போது அது முடிக்கப்பட்டுள்ளது.   இந்நிலையில் ஒரு சில இணையதளங்களில் தேர்வு எழுதிய மாணவர்களின் தகவல்கள் ரூ. 2 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டதாக தகவல்கள் வந்தன.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சி பி எஸ் இ தலைவர் அனிதா கார்வாலுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.  அந்த கடிதத்தில், “ஒரு சில இணைய தளங்களில் நீட் தேர்வு எழுதிய 2 லட்சம் மாணவர்களின் தனிப்பட்ட தகவல்கள் சட்டவிரோதமாக வெளியாகி இருக்கிறது.   ஊடகங்களில் வரும் தகவலின் படி இவை பணத்துக்கு விற்கப்பட்டுளன.

மாணவர்களின் பெயர், ஈ மெயில் முகவரி, தொலைபேசி எண்கள் உள்ளிட்ட விவரங்கள் வெளியாகி உள்ளது அதிர்ச்சியை அளிக்கிறது.   சி பி எஸ் இ யின் பாதுகாப்புக் குறைபாட்டை இது காட்டுகிறது.   இதற்கு பொறுப்பான அதிகாரிகளிடம் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும்.  இது போன்ற மோசடிகள் எதிர்காலத்தில் நடைபெறாத வண்ணம் பாதுகாப்பு குறைபாடுகள் நீக்கப்பட வேண்டும்” என கூறி உள்ளார்.

இதற்கு சி பி எஸ் இ மறுப்பு தெரிவித்துள்ளது.  அதன் இணைய தளத்தில், “நீட் தேர்வு எழுதிய 13,26,725 மாணவர்களின் விவரங்களும் தேசிய தகவல் மையத்தில் பாதுகாப்பாக உள்ளது.  அரசின் பல்வேறு விவரங்களை இந்த மையம் ஏற்கனவே பாதுகாப்பாக வைத்துளது.  இந்த மையத்தின் மூலம் வெளியிடப்பட்ட முடிவுகளில் மாணவர்களின் தொலைபேசி எண்கள்,  ஈ மெயில் முகவரி  போன்ற எதுவும் குறிப்பிடவில்லை.  எனவே சி பி எஸ் இ தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளியாகவில்லை” என தெரிவித்துள்ளது.