பாஜகவின் தனி மனித தாக்குதலால் பலனடையப் போகும் ராகுல் காந்தி

டில்லி

முன்பு மோடிக்கு நடந்தது போல் தற்போது ராகுல் காந்திக்கும் தனி மனித் தாக்குதல் நடப்பதால் ராகுல் பலனடைவார் என கூறப்படுகிறது.

கடந்த 2002 முதல் மோடியை காங்கிரஸ் தனிப்பட்ட முறையில் கடுமையாக தாக்கி வந்தது. அப்போதைய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி மரண வியாபாரி என மோடியை அழைத்தார். மற்றொரு மூத்த காங்கிரஸ் தலைவ்ர் மணி சங்கர் ஐயர் மோடியை நீச மனிதர் என குறிப்பிட்டார்.   இது போன்ற தாக்குதல்கள் மோடிக்கு சாதகமாக அமைந்தது.

இதை வைத்து மோடியின் இந்துத்வா தலைவர்கள் பிரசாரம் செய்யத் தொடங்கினர். இத்தகைய தனிப்பட்ட தாக்குதல்களால் மோடி மேலும் மேலும் புகழை அடைந்தார். அத்துடன் கடந்த 2014 ஆம் வருடம் பிரதமர் பதவியை கைப்பற்றினார். அதற்கு முக்கிய காரணம் மோடி குறித்து காங்கிரஸ் செய்த எதிர்மறை விமர்சனம் என்பதை அனைவரும் அறிவார்கள்.

கடந்த 2013 ஆம் வருடத்தில் இருந்து ராகுல்காந்தியை பாஜகவினர் கடுமையாக தாக்கி வருகின்றனர். குறிப்பாக மோடியும் அமித் ஷாவும் நேரடியாக ராகுல் காந்தியை தனிப்பட்ட முறையில் தாக்கி வருகின்றனர். இதனால் ராகுல் காந்தி மக்களிடையே மேலும் புகழ் அடைந்து வருவதாக கருத்துக் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.

ஆளும் கட்சியான பாஜக நேரடியாக ராகுல் காந்தியை எதிர்த்து வருவதாலேயே காங்கிரஸ் கட்சியின் தலைமை பதவியை அவர் அடைவது எளிதாகியது என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் பாஜகவை எதிர்க்க ராகுல் காந்தியின் தலைமையை நாடுகின்றனர். ஒரு காலத்தில் காங்கிரசை எதிர்த்து தெலுங்கு தேசம் கட்சி ஆரம்பிக்கப்பட்டதாகும்.

இவ்வாறு பாஜகவின் தனி மனித தாக்குதலால் ராகுல் காந்தி பாஜகவை எதிர்க்கும் தனித் தலைவர் என்னும் நிலை உருவாகி உள்ளது. மேலும் எதிர்க்கட்சியினரிடையே பாஜகவை எதிர்க்க ராகுல் காந்தியின் தலைமை அவசியம் தேவை என்னும் நிலையையும் பாஜகவின் பிரசாரம் ஏற்படுத்தி உள்ளது. ஆகவே பாஜக வின் தனி மனித தாக்குதலால் ராகுல் காந்தி பலனடைவார் என ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.