காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக ராகுல்காந்தி இன்று பொறுப்பேற்பு: தொண்டர்கள் உற்சாகம்

டில்லி,

கில இந்திய  காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள  ராகுல்காந்தி இன்று பொறுப்பேற்கிறார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட ராகுல்காந்தி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரிவு செயலாளர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன்  கடந்த திங்கட்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இன்று அவர் தலைவராக பொறுப்பேற்கிறார்.

இதையடுத்து கடந்த  19 ஆண்டுக்காலமாக அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு  தலைமைப் பதவி வகித்து வந்த  சோனியா காந்தியிடமிருந்து கட்சியின் தலைவர் பொறுப்பு, ராகுல்காந்தியிடம் இன்று ஒப்படைக்கப்படுகிறது.

பதவியேற்பு நிகழ்ச்சியில் சோனியா காந்தி,மன்மோகன்சிங் உள்பட மூத்த காங்கிரஸ் தலைவர்கள், மாநில தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

காங்கிரஸ் கட்சி தொண்டர்கள்  உற்சாகத்துடன் ராகுலை வரவேற்க தயாராகி வருகிறார்கள்.  கட்சித் தலைமை யகத்தில் திரண்டிருந்த தொண்டர்கள், அவரது படம் பதிந்த சாவி வளையங்கள், பேட்ஜ்கள் மற்றும் இனிப்புகளை அங்கிருந்தவர்களுக்கு வழங்கி கொண்டாடினர்.

ராகுல்காந்தி தலைமைப் பொறுப்பை இன்று ஏற்க உள்ளதால் டில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகம் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.

“இளந்தலைவரான ராகுல்காந்தியின் எளிமை, மக்களுடன் பழகும் தன்மை, மக்களோடு மக்களாக கலந்து அவர்களின் கஷ்ட நஷ்டங்களை புரிந்துகொள்ளும் பாங்கு போன்றவை  எங்களுக்கு கூடுதல் உற்சாகத்தை அளித்துள்ளது” என்று காங்கிரஸ் தொண்டர்கள்  கருத்து தெரிவிக்கின்றனர்.

மேலும், “இளம்பெண்கள் மற்றும் இளைஞர்களிடையே ராகுல்காந்தி நாட்டின் நம்பிக்கைக்கு உரிய தலைவராக உருவெடுத்துள்ளார். வருங்கால இந்தியாவின் வழி காட்டி என்றும், இளைஞர்களின் எழுச்சி மிகு தலைவர்” என்று தொண்டர்கள் தெரிவிக்கிறார்கள்.

இந்நிலையில், தமக்கு ஓய்வு பெறும் காலம் வந்து விட்டதாக சோனியா காந்தி தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள, காங்கிரஸ் செய்தித்தொடர்பா ளர் ரந்தீப் சுர்ஜேவாலா,  சோனியா காந்தி கட்சித் தலைவர் பதவியில் இருந்துதான் ஓய்வு பெறுகிறாரே தவிர அரசியலில் அவருடைய பணி தொடரும் என்று விளக்கம் அளித்துள்ளார்.