டெல்லி: மத்தியஅரசு கொண்டுவந்துள்ள  வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, டிராக்டர் பேரணி நடத்துகிறார். நாளை முதல் 3 நாட்கள் இந்த பேரணி நடைபெற உள்ளது.
விவசாய விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்ட மசோதா என 3 வேளாண்துறை தொடர்பான மசோதாக்கள் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி மோடி அரசால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த புதிய  வேளாண் சட்டத்திற்கு நாடு முழுவதும் விவசாயிகளியே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சியும் நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி, விவசாய சங்கங்களுடன் இணைந்து போராட்டங்கள் நடத்தி வருகிறது. கடந்த 28ந்தேதி நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி பிரமாண்டமான எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியது. நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டு வருகிறது-
இந்த நிலையில்,  நாளை முதல் (அக்டோபர்  4, 5, 6) 3 நாட்கள்  ராகுல்காந்தி டிராக்டர் மூலம்  தொடர் பேரணி நடத்தி உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே இன்று (3ந்தேதி)  தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த  நிலையில், தற்போது நாளை முதல் இப்பேரணி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி, காலை 11 மணிக்கு  பஞ்சாபில் துவங்கும் பேரணி 6ம் தேதி அரியானாவில் முடிவடையும் எனவும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.