பா.ஜ.க. விமர்சனத்துக்கு பேனர் மூலம் காங்கிரஸார் பதிலடி

டில்லி:

ராகுல்காந்தியை இந்து அல்ல என்று தொடர்ந்து விமர்சனம் செய்துவரும் பாஜகவுக்கு, ஒரு பேனர் மூலம் காங்கிரஸார் பதிலடி கொடுத்திருக்கிறார்கள்.

சமீபத்தில் ராகுல் காந்தி சோமநாத் சிவ ஆலயத்துக்கு சென்ற போது இந்து அல்லோதார் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டார் என்று பா.ஜ.க.வினர் சர்ச்சையைக் கிளப்பினார். ஆனால், அந்தக் கோயிலில் இருந்தது ஒரே ஒரு பதிவேடுதான் என்றும் அது பொதுவான பதிவேடுதான் என்றும் கோயில் நிர்வாகம் தெரிவித்தது. இதற்கிடையே ராகுல்காந்தியை இந்து அல்ல என்றும் பாஜகவினர் விமர்சித்து வந்தனர். இதற்கு ராகுல்காந்தி, தான் சிறு வயதில் இருந்தே சிவ பக்தன் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். அதற்காக டில்லியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் முன்பு ஒரு பேனரை காங்கிரசார் வைத்திருக்கின்றனர்.

அதில் அனைத்து மதக் கடவுள் படங்களுடன் ராகுல் காந்தி படத்தை இணைத்து அனைவரும் அவருக்கு ஆசி வழங்குவது போல பிரிண்ட் செய்யப்பட்டுள்ளது. ராகுல் காந்திக்கு வலது புறம் “திரு ராகுல் காந்திஜிக்கு அனைத்துக் கடவுள்களும் ஆசி அளித்துள்ளனர். எனவும் இடது பக்கம் “ராகுல் காந்திஜி தலைவரானதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்” எனவும் எழுதப் பட்டுள்ளது.

இந்த பேனர் குறித்து டில்லி காங்கிரஸார், “ராகுல்காந்தி குறித்து பாஜகவினர் தேவையற்ற சர்ச்சைகளை கிளப்பி வருகின்றனர். அதற்கு பதிலடி கொடுப்பதுபோல இந்த பேனர் வைத்திருக்கிறோம். இனியாவது பாஜகவினர் வீண் சர்ச்சைகளை கிளப்பாமல் இருக்கட்டும்” என்கிறார்கள் காங்கிரஸ் தொண்டர்கள்.