ரபேல் விமான கொள்முதலும், பணமதிப்பிழப்பும் மிகப்பெரிய ஊழல்…..மோடி மீது ராகுல் இரு முனை தாக்குதல்

டில்லி:

மத்திய அரசு மீது காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று இரு முனை தாக்குதலை மேற்கொண்டுள்ளார். பணமதிப்பிழப்ப மற்றும் ரபேல் போர் விமான ஊழல் குறித்து அவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளார்.

2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி பணமதிப்பிழப்பு அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டார். இதன் மூலம் புழக்கத்தில் இருந்த ரூ.15.44 லட்சம் மதிப்பிலான ரூ. 500, 1,000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. கருப்பு பணம் ஒழிப்பு, வரி செலுத்தாத பணம், கணக்கில் வராத பணம், தீவிரவாதிகளுக்கு நிதியுதவி, கள்ள ரூபாய் நோட்டுக்கள் போன்றவை ஒழிக்கப்படும் ஆளும் மத்திய பாஜக அரசு அறிவித்தது.

இந்நிலையில் பணமதிப்பிழப்புக்கு பின் ரூ.15.3 லட்சம் மதிப்புள்ள்ள 99.3 சதவீதம் ரூபாய் நோட்டுக்கள் வங்கிகளுக்கு திரும்பி வந்துவிட்டதாக ரிசர்வ்வங்கி சமீபத்தில் அறிவித்தது.

இந்நிலையில காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறுகையில்,‘‘பணமதிப்பிழப்பு ஒரு மிகப்பெரிய ஊழல். இதன் மூலம் மோடியின் முதலாளித்துவ நண்பர்கள் பயனடைந்துள்ளனர். மோடியின் நண்பர்களாக உள்ள 15 முதல் 20 தொழிலதிபர்கள் தங்களது கருப்பு பணத்தை சிறு தொழிலதிபர்கள் பெயரில் வெள்ளை பணமாக்கியுள்ளனர்.

மோடி மக்களின் பாக்கெட்டுகளில் இருந்து பணத்தை எடுத்து நேரடியாக தனது முதலாளி நண்பர்களின் பாக்கெட்டுகளில் போட்டுவிட்டார். இது தான் பெரிய ஊழல். பணமதிப்பிழப்பு என்பது தவறு கிடையாது. அது நாட்டு மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகும்’’ என்று தெரிவித்துள்ளார்.

2016ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு அறிவிப்புக்கு பின்னர் பெரும்பாலான பழைய ரூபாய் நோட்டுக்கள் அனைத்தும் வங்கிகளுக்கு திரும்பி வந்துவிட்டது என்று ரிசர்வ் வங்கி அறிவித்ததை தொடர்ந்தே ராகுல்காந்தி இத்தகைய தாக்குதலை மத்திய அரசு மீது மேற்கொண்டுள்ளார்.