கேரளாவில் 16, 17-ந்தேதிகளில் ராகுல்காந்தி தேர்தல் பிரசாரம்….

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கேரள மாநிலத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து 2 நாட்கள் தீவிர பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

வரும் 16 மற்றும்  17-ந்தேதிகளில் அவர் பிரசாரம் மேற்கொள்ள இருப்பதால், காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளை செய்து வருகின்றனர். ராகுல்காந்தி உ.பி. மாநிலத்தில் அமேதி தொகுதியில்  வேட்புமனு தாக்கல் செய்ய சென்றபோது, அவர்மீது பச்சை நிற லேசர் ஒளி பட்ட விவகாரம்  பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கேரளா வரும் ராகுலுக்கு பலத்த  பாதுகாப்பு வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.

16ந்தேதி கேரளா வரும் ராகுல்,  அங்கு  திருவனந்தபுரம், பத்தினம்திட்டா, பத்மநாபபுரம், ஆழப்புழை, வயநாடு பகுதிகளில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார்.

வரும்  16-ந்தேதி காலை டெல்லியில் இருந்து புறப்படும் ராகுல் முதலில் காலை 10 மணிக்கு பத்மநாபபுரத்தில் முதல் பிரசாரம்  மேற்கொள்கிறார். தொடர்ந்து பத்தனம்திட்டா செல்கிறார். பின்னர் மதிய இடைவேளைக்கு பிறகு, பிற்பகல் 4 மணிக்கு ஆலப்புழை நகரில் நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்திலும், மாலை 6 மணிக்கு திருவனந்தபுரத்தில் நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்திலும் கலந்துகொண்டு ஓட்டு வேட்டையாடுகிறார்.

இரவு தங்குவதற்கு கண்ணூருக்கு செல்லும் ராகுல்காந்தி, மறுநாள் தான் போட்டியிடும் வயநாடு தொகுதிக்கு சென்று அன்று முழுவதும தனது வெற்றிக்காக  தீவிர பிரசாரத்தை முன்னெடுக்கிறார்.

இதன் காரணமாக   ராகுலுக்கு 16, 17-ந்தேதிகளில் அதிகபட்ச பாதுகாப்பு அளிக்க கேரள மாநில போலீசார் முடிவு செய்துள்ளனர்.