காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி அடுத்த மாதம் பதவி ஏற்பார்!! வீரப்பமொய்லி தகவல்

--

ஐதராபாத்:

ராகுல் காந்தி விரைவில் காங்கிரஸ் தலைவராக பதவியேற்க வாய்ப்பு இருக்கிறது என முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்தார்.

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் காங்கிரஸ் துனைத்தலைவர் ராகுல் காந்தி, அங்கு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ‘‘ காங்கிரஸ் தலைவராக பதவியேற்க தயாராக இருக்கிறேன்’’ என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான வீரப்ப மொய்லி ஐதராபாத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ‘‘ உட்கட்சி தேர்தல் மூலம் காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவியேற்க ராகுல் காந்தி விரும்புவார். கட்சி கேட்டுக்கொண்டால் மட்டுமே தலைமை பொறுப்பை ஏற்க தயாராக இருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி தலைமை ஏற்றால் அது கட்சிக்கு மிகப்பெரும் திருப்பு முனையாக அமையும்’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘ராகுல் காந்தி உடனடியாக காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டும். அதுவே கட்சிக்கும், நாட்டுக்கும் நல்லது. காங்கிரஸில் உள்ள அனைவரும் ராகுல் காந்தி தலைமை ஏற்பது தாமதம் ஆகியுள்ளதாக கருதுகின்றனர்.

விரைவில் நடக்கவுள்ள மாநில சட்டமன்ற தேர்தல்களை மட்டும் கருத்தில் கொள்ளாமல், எதிர்வரும் 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலையும் கணக்கிட்டு நடவடிக்கை எடுக்கப்படும். ராகுல்காந்தியின் புதிய அணு குமுறையும், புதிய திட்டங்களும் வரவேற்பை பெற்றுள்ளது’’ என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ‘‘தற்போது ராகுல் காந்தி உட்கட்சி தேர்தலுக்காக காத்திருக்கிறார். தேர்தல் நடைமுறை மூலமே தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டும் என உறுதியாக உள்ளார். மாநில வாரியான உட்கட்சி தேர்தல் இந்த மாதத்தில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் பதவி ஏற்ற பிறகு முதல் பணியாக மாநில வாரியாக அனைத்து நிர்வாகிகளையும் மாற்றி அமைக்க வேண்டும்.

மாநில பொறுப்பு முதல் கீழ்மட்ட நிர்வாகிகள் வரை இந்த மாற்றம் இருக்க வேண்டும். பாஜக.வுக்கு மாற்றாக காங்கிரஸ் கட்சியை தான் மக்கள் விரும்புகின்றனர். எதிர்வரும் கர்நாடகா மாநில தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும். பாஜக அங்கு மீண்டும் ஆட்சி அமைக்கும் என்ற பேச்சுக்கே இடமில்லை ” என்றார்.

ராகுல் காந்தி அடுத்த மாதம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்பாரா? என்று நிருபர்கள் கேட்டதற்கு, ‘‘ஆம்” என்று வீரப்ப மொய்லி பதிலளித்தார்.