தகவல் அறியும் சட்டத்தின் கீழ் அரசியல் கட்சிகள் : ராகுல் காந்தி கருத்து

டில்லி

ரசின் அனைத்து அமைப்புகளையும் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கொண்டு வந்தால் அரசியல் கட்சிகளையும் கொண்டு வரலாம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார்.

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் அரசியல் கட்சிகளை கொண்டு வர வேண்டும் என்னும் கோரிக்கை தொடர்ந்து எழுப்பபட்டு வருகிறது. இதற்கு பாஜக உள்ளிட்ட ஒரு சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால் கட்சி நடவடிக்கைகளில் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டுமானால் அரசியல் கட்சிகள் தகவல் அறியும் சட்ட வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

நேற்று டில்லி ஜவகர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடல் நடத்தும் போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “நாட்டில் அனைத்திலும் வெளிப்படை தன்மை தேவை என்பதை நானும் ஒப்புக் கொள்கிறேன். அவ்வகையில் அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகளுக்கு வெளிப்படைத் தன்மை அவசியமானது தான்.

அதே நேரத்தில் வெளிப்படை தன்மை என்பது அரசியல் கட்சிகளுக்கு மட்டுமின்றி அரசின் அனைத்து அமைப்புகளுக்கு அவசியமான ஒன்றாகும். இவ்வகையில் நீதித்ஹ்துறை, ஊடகங்கள், அரசு நிர்வாகம் உள்ளிட்ட அனைத்துக்கும் வெளிப்படைத் தன்மை தேவை. ஆகவே அரசியல் கட்சிகளை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கொண்டு வர விரும்பினால் இந்த அமைப்புகளையும் கொண்டு வர வேண்டும்.

அது மட்டுமல்ல, அரசியல் கட்சிகளை இந்த சட்ட வரம்பில் கொண்டு வரும் முன்பு தொழிலதிபர்களையும் ஏன் கொண்டு வரக்கூடாது? அவர்களின் நடவடிக்கைகளையும் மக்கள் அறிந்துக் கொள்ள வேண்டும். எப்போதுமே நான் 100% பேச்சு, கருத்து சுதந்திரம் மற்றும் வெளிப்படை தன்மைக்கு ஆடாரவு அளிப்பவன்” என தெரிவித்துள்ளார்.