சூரத்:

பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் பங்கேற்ற காமிரா மேன் ஒருவர் திடீரென மயங்கி விழுந்ததால், தனது பேச்சை பாதியிலேயே நிறுத்திவிட்டு, அவருக்கு உதவி தனது பாதுகாவலர்களுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டார். இது வியப்பை ஏற்படுத்தியது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புவனேஷ்வர் சென்றிருந்தபோது, புகைப்படம் எடுத்த படி பின்னால் சென்ற ஒரு  புகைப் படக்காரர் படியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதைகண்ட ராகுல் பதறிப் போய், அவருக்கு உதவி செய்தார். ராகுலின் இந்த செயல் பெரும் பாராட்டை பெற்றது.

இந்த நிலையில்,  பிரதமர் மோடி சூரத்தில் சர்வதேச விமான நிலையத்தின் கூடுதல் முனைய விரிவாக்கத்திற்கான அடிக்கல் நாட்டுவிழாவில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது மோடியின் பேச்சை கேமிராவில் பதிவு செய்து கொண்டிருந்த கிஷன் ரமோலியா என்ற கேமிராமேன் திடீரென மயங்கி விழுந்தார்.

இதை கவனித்த பிரதமர் மோடி தனது பேச்சை பாதியில் நிறுத்தினார். இதன் காரணமாக திடீர் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது தனது பாதுகாவலரை அழைத்த மோடி, மயங்கி விழுந்த காமிராமேனை சுட்டிக்காட்டி, 108 ஆம்புலன்சை வரவழைத்து மருத்துவ சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து மயங்கி விழுந்த கேமிராமேன் உடனடியாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை  பெற்றார். மருத்துவ சிகிச்சைக்கு பின் கிஷன் ரமோலியா கூறுகையில் தக்க நேரத்தில் தமக்கு உதவி செய்த பிரதமருக்கு நன்றியும் தெரிவித்தார்.

ஆனால், ஏற்கனவே ஒருமுறை மோடியின் நிகழ்ச்சியின்போது, எதிர்பாராமல் கீழே விழுந்த ஊடகத்தை சேர்ந்தவருக்கு எந்தவித உதவி செய்யு முன்வராமல், அதை கண்டும் காணாமல் தொடர்ந்து தனது பேச்சிலேயே கவனமாக இருந்த மோடி, தற்போது ராகுல்காந்தியின் செயலால், தனது நடத்தையையும் சற்றே மாற்றி இருப்பது வரவேற்கத்தக்கது.