டில்லி

காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவில் ராகுல் காந்தி பிடிவாதமாக உள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மக்கள் மிகவும் எதிர்பார்த்த காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடைந்துள்ளது.    அதிலும் குறிப்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்ட இரு தொகுதிகளில் அமேதியில் பாஜக அமைச்சர் ஸ்மிரிதி இராணியிடம் தோல்வி அடைந்துள்ளார்.    இதை ஒட்டி அவர் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.   ஆனால் இதை காங்கிரஸ் செயற்குழு ஏற்கவில்லை.

இந்நிலையில் ராகுல் காந்தி தனது ராஜினாமா முடிவில் இருந்து மாற மாட்டேன் என பிடிவாதம் பிடிப்பதாக தி டெலிகிராஃப் ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.    காங்கிரஸ் செயற்குழு கூறிய படி தலைமை பகுதிக்கு வேறு யாரும் தகுதி இல்லை என கூறியதை ராகுல் ஒப்புக் கொண்ட போதிலும் பதவி விலகுவதில் பிடிவாதமாக உள்ளார் என கூறப்படுகிறது.

இது குறித்து காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் கலந்துக் கொண்ட ஒரு இளைய தலைவர், “ராகுல்ஜி பேசுவது சாதாரணமாக இருப்பது போல் தெரிந்தாலும் அவர் முடிவை அவர் மாற்றிக் கொள்வது கிடையாது.  அவர் ராஜினாமா செய்வதாக தெரிவித்த போதே அதற்காக பல முறை யோசித்து முடிவு எடுத்திருப்பார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும்.

அத்துடன் அவர் தமது பதவியை ராஜினாமா செய்தாலும் கட்சியை விட்டு எங்கும் போகப்போவதில்லை என கூரி உள்ளார்   முன்பை விட மேலும் அதிகமாக உழைத்து கட்சியின் முன்னேற்றத்துக்கு பாடுபடப் போவதாகவும் தனது திறமையை நிரூபிக்கும் வரை எந்த பதவியும் தேவை இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

காங்கிரசுக்கு எப்போதுமே நேரு – காந்தி குடும்பத்தின் உழைப்பு தேவைப்படுகிறது.  அதை தலைமை பதவியில் இல்லாமலே அளிக்க தாம் தயாராக உள்ளதாகவும் இனி தீவிர பிரசாரத்தில் ஈடு பட தீர்மானித்துள்ளதால் வேறு யாராவது தலைமை பொறுப்பை ஏற்றுக் கொள்ளட்டும் எனவும் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்தார். “ என தெரிவித்துள்ளார்.

அதன் பிறகு காங்கிரஸ் செயற்குழுவிடம் ராகுல் காந்தி புதிய தலைவரை தேர்வு செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.  அத்துடன் புதிய தலைவர் தனது தாய் சோனியா காந்தி மற்றும் சகோதரி பிரியங்கா காந்தி ஆகியோர் அல்லாத ஒருவராக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

தற்போதைய நிலையில் மோடி மற்றும் ஆர் எஸ் எஸ் அமைப்புகளுக்கு எதிராக அரசியல் நடத்தும் அளவுக்கு காங்கிரசில் தலைவர்கள் இல்லாததால் செயற்குழு வேறு தலைவரை நியமிக்க இயலாத நிலையில் உள்ளது.

Thanks : THE TELEGRAPH