டில்லி:

காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவரான ராகுல் காந்தி, தீபாவளி பண்டிகைக்கு பிறகு கட்சியின் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்கக் கூடும் என்று ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரான ராகுல் காந்தி அக் கட்சியின் தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என்று கட்சியின் மூத்த தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் தெரிவிக்கையில், “தற்போது காங்கிரஸில் உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. தீபாவளிக்கு பிறகு, கட்சியின் புதிய தலைவராக ராகுல்காந்தி பொறுப்பேற்றுக் கொள்வார் என்று நம்புகிறேன்.

அவர் தலைவர் பதவி ஏற்க இதுதான் சரியான தருணம். ராகுல் காந்தி அப்பதவியை ஏற்க வேண்டும் என்பது எங்கள் அனைவரின் கருத்தாகும்.

துணை தலைவராக இருந்து வரும் ராகுல் கட்சிக்காக தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

ராகுலின் சகோதரி பிரியங்கா காந்தி காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும் அவர் தீவிர அரசியலில் ஈடுபடுவாரா என்பது குறித்து வர்தான் முடிவு எடுக்க வேண்டும்.

நேரு குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் மட்டும் ராகுல் காந்தி தலைமை ஏற்க வேண்டும் என்று சொல்லவில்லை. தலைமைக்குரிய அத்தனை தகுதிகளும் அவருக்கு இருப்பதால்தான் சொல்கிறோம்” என்று சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.

இவர் உட்பட காங்கிரஸ் தலைவர்கள் பலரும் ராகுலை தலைமை ஏற்க பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.