ல்பேட்டா, கேரளா

கேரள பழங்குடியை சேர்ந்த முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி ஆன ஸ்ரீதன்யா என்னும் பெண் ராகுல் காந்தியை சந்தித்தார்.

காங்கிரஸ் அரசால் மகாத்மா காந்தி கிராமப்புற கட்டாய வேலை வாய்ப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது. கடந்த 205 ஆம் வருடம் கொண்டு வரப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் கிராமப்புற மக்களுக்கு அரசு 100 நாட்கள் வேலை அளித்து வருகிறது. இதில் கிராமத்தில் உள்ள ஆண், பெண் ஆகிய இரு பாலருக்கும் வாய்ப்பளித்து குறைந்த பட்ச ஊதியம் பெற வழி செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் கல்பேட்டா என்னும் பழங்குடி சிற்றூரில் வேலை இல்லாமல் இருந்த சுரேஷ் மற்றும் அவர் மனைவிக்கு இந்த திட்டத்தின் மூலம் பணி அளிக்கப்பட்டதால் அவர்கள் தங்கள் வறுமையில் இருந்து சற்று மீண்டுள்ளனர். அத்துடன் தங்கள் குழந்தைகளுக்கு அவர்களால் கல்வி அளிக்கவும் முடிந்தது. பழங்குடியை சேர்ந்த இவர்களின் மகள் ஸ்ரீதன்யா தற்போது இந்த பழங்குடியினரில் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி ஆகி உள்ளார்.

ஸ்ரீதன்யா தனது பெற்றோருக்கு வேலை வாய்ப்பு அளித்த திட்டத்தை கொண்டு வந்த் காங்கிரஸ் கட்சிக்கு நன்றி தெரிவிக்க விரும்பினார். அதை ஒட்டி கேரளாவில் தேர்தல் சுற்றுப் பயணம் செய்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளர். தாம் ஐஏஎஸ் வரை படித்ததற்கும் தற்போது 410 ஆவது ரேங்கில் தேர்ச்சி அடைந்ததற்கும் காங்கிரஸ் அரசின் 100 நாள் வேலை திட்டமே காரணம் என தெரிவித்துள்ளார்.

திருவம்பாடி பகுதியில் நடந்த பேரணியில் ராகுல் காந்தி, “இன்று நான் வயநாட்டின் முன்னணி பெண்மணி ஸ்ரீதன்யா சுரேஷ் உடன் பகல் உணவு சாப்பிட்டேன். சில தினங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி இந்த மகாத்மா காந்தி கிராமப்புற கட்டாய வேலை வாய்ப்புத் திட்டம் பயனற்றது எனவும் மக்களை சோம்பேறிகளாக்குவதாகவும் தெரிவித்தார்.

நான் இன்று ஸ்ரீகன்யாவிடம் அவர் பெற்றோர்கள் என்ன செய்கிறார்கள் என கேட்டதற்கு அவர் தனது பெற்றோர்கள் கிராமப்புற கட்டாய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணி புரிவதாகவும் அந்த ஊதியத்தினால் தாம் படித்து முன்னேறியதாகவும் தெரிவித்தார். ஆனால் பிரதமர் இந்த திட்டத்தை அவமதிக்கிறார். அவருக்கு அடிப்படை பொருளாதாரம் பற்றி எதுவும் தெரியவில்லை.” என உரையாற்றினார்.